Tamilnadu

‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’: பாஜகவை விரட்டி அடிக்க திமுக எடுத்த தேர்தல் வியூகம் - முதலமைச்சர் அதிரடி!

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் (காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த தீர்மானம், ‘இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்' ஒலிக்கட்டும் என்ற தேர்தல் பரப்புரை மற்றும் கழகத் தலைவர் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :-

தீர்மானம் : 1

கழக நிர்வாகிகளுக்கு நன்றி!

சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி, 'இந்தியா வெல்லட்டும்' என்ற உயர்ந்த நோக்குடன் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை கழகத் தலைவர் அவர்கள் தொடக்கி வைத்துள்ளார்கள்.

கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, நாடாளுமன்றத் தொகுதிவாரியாக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கூட்டங்கள் பொதுமக்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளன. பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டிய கட்சி என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக மக்கள் மன்றத்தில் வைத்துள்ளோம்.

'நாற்பதும் நமதே ' நாடும் நமதே' என்ற முழக்கத்துடன் இக்கூட்டங்களை மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ள கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் இக்கூட்டம் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கிறது.

தீர்மானம் : 2

தேர்தல் பரப்புரையாக ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' ஒலிக்கட்டும்!

ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் சூழலில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம், குடிசை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க 8 லட்சம் வீடுகள் கட்டித் தரும் 'கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம், வறுமை இல்லாத் தமிழ் நாட்டை உருவாக்குவதற்காக 5 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம் – என பல்வேறு தரப்பினரையும் குறித்துச் சிந்தித்து, தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரும் பயன்படும் வகையில் நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை அறிவித்து, திராவிட மாடலை உலகமே பாராட்ட செய்து வரும் முதலமைச்சரின் சீரிய நிர்வாகத் திறனையும், வழிகாட்டும் பாங்கையும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மனமார வாழ்த்தி நன்றி பாராட்டுகிறது.

திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், பிப்ரவரி 26-ஆம் தேதியன்று ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்குவது என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

இதற்கென வரும் 24, 25 ஆகிய நாட்களில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தனித்தனியாக, தொகுதிப் பார்வையாளர்கள், BLA-2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக் கொண்டு கூட்டங்களை நடத்தி, மக்களை அணுகுவது குறித்து ஆலோசிக்கவும், 26-ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரை குறித்து சில நிமிடங்களாவது விளக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதனோடு மறைமுகக் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வை முழுமையாக வீழ்த்தி, கழகத் தலைவரின் குரல் டெல்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்திட வேண்டும் என இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 3

கழகத் தலைவர் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!

மார்ச் 1-ஆம் தேதியன்று நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத் தலைவர் 71-ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான நம் தலைவர், கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார்.

தந்தை பெரியாரின் சமூகநீதியையும், பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், தமிழினத் தலைவர் கலைஞரின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார் கழகத் தலைவர் அவர்கள். அத்தகைய பெருமைமிகு தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி நடத்திடுவது எனவும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மகிழ்வோடு தீர்மானிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ் திரையுலகை மீட்டெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி...” - தென்னிந்திய நடிகர் சங்கம் !