Tamilnadu

’இந்த வேளாண் பட்ஜெட் தாவிக் குதிக்கும் குழந்தை’ : பேரவையில் பெருமிதத்துடன் சொன்ன அமைச்சர் MRK!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையில் தமிழ்கனவுகள் என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்று 2024-25ம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 3 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் சரிவரச் செயல்படுத்தப்பட்டு எதிர்பார்த்த பலன்களைத் தந்துள்ளன.

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 7,705 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு இதுவரை 23,237 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும், 3587 ஏக்கர் பரப்பளவில் பழமரங்களும், மரங்கள் முதலியவையும் நடப்பட்டு தரிசு நிலங்கள் நிரந்தர சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

1564 பண்ணைக் குட்டைகளும் அமைக்கப்பட்டு பாசனப்பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022-23,2023 -24 ஆம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட ரூ.17 கோடியை விட கூடுதலாக ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 4980 ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.

2020-21ஆம் ஆண்டில் 89 லட்சத்து ஆறாயிரம் ஏக்கராக இருந்த பாசனம் பெற்ற பயிர் பரப்பு 2022-23 ஆம் ஆண்டில் 95 லட்சத்து 39 ஆயிரம் எக்கராக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அளிக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கைகளானவை பாலன், மீளி, மறவோன், திறவோன் போன்று தவழ்ந்து நடந்து ஓடிவிளையாடி நம்மை மகிழ்வித்தன. இந்த நான்காம் வேளாண் நிதிநிலை அறிக்கையானது புதுத்தெம்பு கொண்டு பொலிவுடன் தாவி குதிக்கும் குழந்தையாக உள்ளது" என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Also Read: விவசாயிகளை மகிழ்வித்த வேளாண் பட்ஜெட் : 20 முக்கிய அம்சங்கள் இதோ!