Tamilnadu

வேளாண் பட்ஜெட் : கரும்பு விவசாயிகளுக்கான 10 இனிப்பான அறிவிப்புகள் - முழு விவரம் இங்கே!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையில் தமிழ்கனவுகள் என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்று 2024-25ம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் சில:-

1. 2023-2024 அரவைப் பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை:

ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் முன் எப்போதும் இல்லாத அளவில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு.

2. கரும்பு சாகுபடி மேம்பாட்டுத்திட்டம்:

கரும்பு விவசாயிகளின் நலனுக்காகவும், சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும், பூச்சி, நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புடைய அதிக சர்க்கரைக் கட்டுமானம் தரக்கூடிய புதிய கரும்பு இரக விதைகள் வழங்கிட ரூ. 7.92 கோடி நிதி ஒதுக்கீடு.

3.சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்:

கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் நவீன கரும்பு எடைமேடைகள், சுழல் கவிழ்ப்பான், சிமெண்ட் கான்கிரீட் கரும்புதளங்கள், கழிவுமண் மக்கவைக்கும் களங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ. 12.51 கோடி நிதி ஒதுக்கீடு.

சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் உயர்த்துதல்- ரூ. 12.40 கோடி நிதி

4.பெரம்பலூர், செய்யாறு, வேலூர், சேலம், மதுராந்தகம், சுப்பிரமணிய சிவா ஆகிய சர்க்கரை ஆலைகளில் ஆலை அரவை பகுதி தானியங்கிமயமாக்கிட ரூ. 3.6 கோடி.

5.செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை நிறுத்தம் ஏற்படுவதை தவிர்த்திட புதிய டர்பைன் ரோட்டர் அசெம்பிளி அமைத்திட ரூ. 6.31 கோடி.

6.செங்கல்ராயன், வேலூர், செய்யாறு, அறிஞர் அண்ணா, பெரம்பலூர், தர்மபுரி, எம்.ஆர்.கே ஆகிய சர்க்கரை ஆலைகளில் நீர் சுத்திகரிப்பு நிலைய அயனி மற்றும் எதிர் அயனி பரிமாற்றி நிறுவிட ரூ. 1.39 கோடி.

7.எம்.ஆர்.கே, செய்யாறு ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு அரவை இயந்திரத்தின் மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் கருவி வாங்கிட ரூ. 1.10 கோடி.

தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை நுண்ணீர்ப்பாசனம்:

8.பாசன நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, பயிர் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும், பயிரின் உற்பத்தி, உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், 2.22 இலட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ரூ. 773.23 கோடி நிதி ஒதுக்கீடு.

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம்:

9.தென்னங்கன்றுகள் வழங்கவும், ஊடுப்பயிர் சாகுபடி மேற்கொள்ளவும், தென்னை நாற்றங்கால்கள் அமைத்தல், பழைய தோட்டங்களைப் புதுப்பித்தல், உற்பத்தித்திறன் அதிகரிக்க செயல்விளக்கத்திடல், பரப்பு விரிவாக்கம், கேரளா வாடல் நோய், வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு, மதிப்புக்கூட்டுதல் பயிற்சி போன்றவற்றிற்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு.

10.நீர் பயன்பாட்டினை சிக்கனப்படுத்தி, வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய பயிர்களுக்கு ரூ. 3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

11.பகுதிசார் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் ரூ. 2.70 கோடி மானியத்தில் வழங்கப்படும்.

12.தானியங்கி மின்னணு நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க 12 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்களுக்காகவும் ரூ. 27.5 கோடி நிதி ஒதுக்கீடு.

தோட்டக்கலைப் பண்ணை இயந்திர கண்காட்சி:

13.தோட்டக்கலைப் பயிர்களில் நிலம் சீர் செய்தல் முதல் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை வரை அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட கண்காட்சி ஒன்று நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.

14.முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்திட ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு.

15.குளிர் மண்டலப் பழப்பயிர்களான பிளம்ஸ், பேரிக்காய் ஆகியவற்றின் தோட்டங்களைப் புதுப்பித்தல், உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரித்திட ரூ. 30 இலட்சம் நிதி ஒதுக்கீடு.

16.ஐந்திணை நிலங்களின் வாழ்வியலைப் பெருமைப்படுத்த முல்லை, மருத நிலப்பூங்காக்கள், கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம், செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையம், தென்காசி-நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைப்பதற்காகவும், உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா இரகங்கள் அறிமுகம் செய்யவும் ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு.

17.செங்காந்தள், மருந்துக்கூர்க்கன், சென்னா, நித்திய கல்யாணி போன்ற மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.

18.முந்திரி சாகுபடிப் பரப்பை அதிகரித்து உற்பத்தியை உயர்த்திட, இயற்கை இடுபொருள் செயல்விளக்கம் அமைத்திட ரூ. 3.36 கோடி நிதி ஒதுக்கீடு.

19.மிளகாய்ப் பயிர் ஊக்குவிப்புத் திட்டம்: தரிசு நிலப் பகுதியிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றியும் தானியங்கள் அறுவடைக்குப் பின் மிளகாய் பயிரிடுவதை ஊக்குவிக்கவும், 200 பண்ணைக்குட்டைகள் அமைத்திடவும் ரூ. 3. 67 கோடி நிதி ஒதுக்கீடு.

20. மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட ரூ. 1 கோடி ஒதுக்கீடு.

Also Read: வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது : இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்!