Tamilnadu
ஒன்றிய அரசு நிறுத்திய கல்வி உதவி தொகையை இனி தமிழ்நாடு அரசே வழங்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் " கடந்த 2007-ம் ஆண்டில் "சிறுபான்மையினர் நல இயக்குநரகம்" உருவாக்கியது திமுக அரசு. அதேபோல், 2007-ம் ஆண்டு முதல், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 சதவீதம் தனி இடஓதுக்கீடு வழங்க சட்டம் இயற்றி இட ஓதுக்கீடு வழங்கப்பட்டது" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து அந்த கூட்டத்தின் முடிவில் சிறுபான்மையினருக்கான ஏராளமான திட்டங்களை தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில், 1 முதல் 8ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு ஒன்றிய அரசு நிறுத்திய கல்வி உதவித் தொகையினை இனி தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தனது சமூகவலைத்தள பக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து கருத்து பதிவிட்டுள்ளார், அதில், "ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சிறுபான்மை நல ஆணையக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நாம், முதன்முதலாக சிறுபான்மைச் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கும் வகையில் நேற்றைய கூட்டத்தை நடத்தியதுடன் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் 10 அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறோம்.
குறிப்பாக, சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியதை எதிர்த்துக் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். எனினும் சிறுபான்மையினர் மீதான ஒன்றிய அரசின் பாராமுகத்தையடுத்து, அவர்கள் நிறுத்திய கல்வி உதவித்தொகையை நாமே வழங்க முடிவெடுத்துள்ளேன்!
ஒன்றிய பா.ஜ.க நிறுத்திய உதவித்தொகை இனித் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்படும்!சிறுபான்மையினரின் சமூக - கல்வி- பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் என்றும் துணைநிற்பது கழக அரசுதான் என இதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது!" என்று கூறியுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !