Tamilnadu

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து வதந்தி பரப்பிய youtube சேனல் மீது நடவடிக்கை- அமைச்சர் அறிவிப்பு!

சட்டமன்ற கூட்டத்தொடர் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் ஆகியோர் சட்டமன்றத்தில் பதிலளித்தனர்.

இந்தநிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகிறது. ஆனால் அவற்றை தவிர்ப்பதற்காக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நேற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அவருக்கு சட்டமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. பெரிய பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறிய பிரச்சனைகள் இருந்தால் அதை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட யார் கூறினாலும், சரி செய்வோம். தொடர்ந்து வாரம் ஒருமுறை நான் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சிறு பிரச்சனைகளையும் சரி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

இங்கு இயக்கப்படுகிற பேருந்துகள் எண்ணிக்கை, குறித்து பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட அந்த செய்தியை பெரும் செய்தியாக, மாற்றப்பட்டு வருகிறது. அன்றைய தினம் விழுப்புரம் போக்குவரத்து கழகத்திலிருந்து வரவேண்டிய பேருந்துகள் வந்து கொண்டிருந்த சூழலில், அந்தப் பேருந்துகள் குறித்த நேரத்தில் வந்து சேர முடியாத சூழல் ஏற்பட்டது. வழக்கமான பேருந்துகளைக் காட்டிலும் அன்று கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டது. எப்படி தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமோ, அதுபோல முகூர்த்த நாள் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை ஆகியவற்றை கருத்தில், கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டது. வந்து சேர வேண்டிய பேருந்துகள் தாமதமானதால் அன்று அது போன்ற சூழல் ஏற்பட்டது. காலையிலிருந்து இரவு வரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல்தான், இருந்தது ஆனால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அந்தப் போராட்டம் நடைபெற்று என விளக்கம் அளித்தார்.

இரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படும் என சிலர் வந்து விடுகிறார்கள். திடீரென 200 ,300 நபர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டு பேருந்துகள் கிடைக்கவில்லை என்று கூறினால் அது எப்படி சாத்தியம் என தெரியவில்லை. பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் தான் செல்லும் என்பது தமிழ்நாடு முழுவதும் உள்ள நடைமுறை. குறிப்பிட்ட அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்றால், அது இயக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது, அதில் என்று மாற்றுக் கருத்தும் இல்லை. முக்கிய தினங்களில் திட்டமிடபடாத பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திடீரென பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தால், என்ன செய்வது . இரவு 11 மணிக்கு மேலாக வாகனங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு பெரிய அளவில் போக்குவரத்து இருக்காது. அதிகாலை நேரத்தில் பயணம் செய்வது என்பது ஆபத்தானது, விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தான் அந்த நேரங்களில் பேருந்து போக்குவரத்து தவிர்க்கப்படுகிறது. அன்றைய தினம் திருச்சிக்கு பேருந்துகள் இல்லை என்று தான் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் அன்றைய தினம், தினமும் இயக்கக்கூடிய 133 பேருந்துகள் மட்டும் இல்லாமல் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 361 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாளை காலையில் இருந்து கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 1215 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு இயக்கப்பட உள்ளன. இனி வதந்திகளை பரப்ப வேண்டிய தேவையில்லை. கூடுதல் வசதிகள் வேண்டுமென்றால் மக்களுடைய கருத்துக்கள் சரி செய்யப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கத்தில் 6 ஏடிஎம்கள் வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 50 கடைகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் youtube சேனல் ஒன்று தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தான் அந்த வீடியோவை பரப்பி இருக்கிறார்கள். வதந்தி பரவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாக இது உள்ளது, வதந்தி பரப்பிய அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.