Tamilnadu

அவசரக்கால கதவை திடீரென திறந்த பயணி : கூச்சலிட்ட சகபயணிகள் - சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?

டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 159 பயணிகள் அமர்ந்திருந்தனர். இதை அடுத்து விமானி, விமானத்தை ஓடு பாதையில், இயக்குவதற்குத் தயாரானார்.

அந்த நேரத்தில் திடீரென விமானத்தின் அவசரகால அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்திவிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விமானத்தின் அவசரக்கால கதவை திறந்தது தெரியவந்தது.

பின்னர் கதவைத் திறந்தது யார்? என்று விசாரிக்கத் தொடங்கினர். இதை அடுத்து பரபரப்படைந்த விமான பணிப்பெண்கள், அவசரக் கால கதவு அருகே உள்ள, இருக்கையில் அமர்ந்திருந்த, பயணியிடம் சென்று விசாரித்தனர்.

அப்போது அந்தப் பயணி,”நான் கதவைத் திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த பட்டனை அழுத்தவில்லை. அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால், அதைத் தெரியாமல் நான் அழுத்தி விட்டேன். உடனே விமானத்துக்குள், அந்த அலாரம் ஒலித்து விட்டது. மேலும் நான் முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், எனக்கு அது அவசரக்கால கதவைத் திறப்பதற்கான பட்டன்” என்று தெரியாது என்றார்.

ஆனாலும் விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள், அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன்பின்பு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்ட பயணியை, சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை விமான நிலைய போலிஸார் பயணியை விசாரித்த போது, உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சரோஸ் (27) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Also Read: ”திரும்பத் திரும்ப ஒரே தவறை செய்து கொண்டே இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : முரசொலி கடும் சாடல்!