Tamilnadu

ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சனை : சபாநாயகரிடம் கடிதம் கொடுத்த செல்வப்பெருந்தகை MLA!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்துள்ள உரையில் பல இடங்களில் நான் உடன்படவில்லை போன்ற உப்பு சப்பு இல்லாத காரணங்களை கூறி வேண்டும் என்றே தனது உரையை ஆளுநர் வாசிக்க மறுத்துவிட்டார். பின்னர் சபாநாயகர் அப்பாவு முழு உரையையும் வாசித்தார்.

மேலும், தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என கூறிய ஆளுநர்தான் அவை மரபை மீறி தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையிலிருந்து வெளியேறினார். இதையடுத்து ஆளுநர் நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதையடுத்து அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட சில பகுதிகளை உள்நோக்கத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இதற்கும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் அவையில் நீக்கப்பட்ட சில பகுதிகளை உள்நோக்கத்தோடு சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அவை உரிமை மீறல் தீர்மானத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவுவிடம் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ கடிதம் அளித்துள்ளார்.

Also Read: தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி!