Tamilnadu
பேரவை அவமதிப்பு: “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டிய ஆளுநர்?” - ஜவாஹிருல்லா விமர்சனம்!
நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்க மறுத்தார். மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற உப்புசப்பில்லாத காரணத்தை கூறி ஆளுநர் தனது உரையை புறக்கணித்தார்.
வழக்கமாக தமிழ்நாட்டில் எந்த அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படாது. மாறாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கும். அதேபோல் நிகழ்ச்சி முடியும்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவடையும். ஆண்டுதோறும் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட இதுவே மரபாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் முதல் நாளான இன்று இதனை ஒரு காரணமாக காட்டி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து தனது மாண்பை மீறியுள்ளார். ஆளுநரின் இந்த செயல் தற்போது பலர் மத்தியிலும் கண்டனங்களை வலுத்து வருகிறது. அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா, ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் முடிந்த பின் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இன்றைய தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தமிழ்நாட்டினுடைய மேதகு ஆளுநர் அவர்கள், வெற்றிகரமாக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டு வெளிநடப்பு செய்திருக்கிறார். வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் ஆளுங்கட்சியை விமர்சித்து வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் ஒரு புதிய மரபாக தமிழ்நாட்டின் ஆளுநர் அவர்கள் இரண்டாவது முறை வெளிநடப்பு செய்திருக்கிறார்.
ஆளுநர் இன்று சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதம் சபையின் மரபை மீறிய விதமாக உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்திருக்கக் கூடிய சாதனைகள் குறித்து ஆளுநருக்கு அனுப்பி, ஆளுநர் ஒப்புதல் பெற்று உரை தீர்மானிக்கப்பட்டு ஆளுநர் உரை சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டது. அந்த உரையை முழுவதும் வாசிக்காமல் குறிப்பிடப்பட்டு இருக்கிற பல்வேறு செய்திகளில் தனக்கு கருத்து மாறுபாடு இருப்பதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார். கருத்து மாறுபாடு இருந்திருந்தால் ஒப்புதல் அனுப்பப்பட்ட போதே தெரிவித்து இருக்கலாம்.
'தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் ஒலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். இது நிறைவேற்றப்படவில்லை' என்று சொல்லி இருக்கிறார். ஆனால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் வழக்கமாக ஆளுநர் உரை நடைபெறும்போது தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக ஆளுநர் இப்படி பேசினாரோ என்று எண்ண தோன்றுகிறது.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைப் போல ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்தை சிறுமைப்படுத்தி நடந்து கொண்டிருக்கிறார். ஆளுநர் அலுவலகத்திற்குரிய மாண்பை அவர் சிதைத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆளுநர் பதவியை கூறியது நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆட்டுக்கு தாடி தேவையில்லை நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலமான கேரளா, பஞ்சாப், தெலங்கானா என இன்னும் பல எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!