Tamilnadu
சட்டப்பேரவையை அவமதித்த ஆளுநர் : “அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயல்...” - சிபிஐ கண்டனம் !
நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்க மறுத்தார். மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற உப்புசப்பில்லாத காரணத்தை கூறி ஆளுநர் தனது உரையை புறக்கணித்தார்.
வழக்கமாக தமிழ்நாட்டில் எந்த அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படாது. மாறாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கும். அதேபோல் நிகழ்ச்சி முடியும்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவடையும். ஆண்டுதோறும் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட இதுவே மரபாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் முதல் நாளான இன்று இதனை ஒரு காரணமாக காட்டி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து தனது மாண்பை மீறியுள்ளார். ஆளுநரின் இந்த செயல் தற்போது பலர் மத்தியிலும் கண்டனங்களை வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஆளுநரின் இந்த செயலுக்கு சி.பி.ஐ கட்சி மாநில மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், “மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் ஆண்டு தோறும் சட்டமன்ற பேரவையில் உரையாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைப்பது அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரின் கடமைப் பொறுப்பாகும். வரும் ஆண்டில் (2024-25) மக்கள் பிரச்சினைகள் மீதும், நிதி நிர்வாக முறையிலும் அரசின் கொள்கை நிலை என்ன? எந்த இலக்கை நோக்கி அரசு பயணிக்கும்? என்பது போன்ற அரசின் கொள்கை நிலையை பேரவையின் கவனத்துக்கு கொண்டு, அதன் மீது எதிர் தரப்பின் கருத்துக்களை அறிவது என்பது அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள கடமையாகும்.
பேரவையில் உரையாற்றும் ஆளுநருக்கு பேரவையின் வாயிலாக “நன்றி தெரிவிக்கும்” தீர்மானம் நிறைவேற்றி அவருக்கு அனுப்புவது அவை வழியாக கடைப்பிடித்து வரும் மரபாகும். இந்த வழக்காறுகளுக்கும். மரபுகளுக்கும் மாறாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு நடந்து கொண்டது போலவே இந்த ஆண்டும் அவையில் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகள் உணர்வுகளையும் புறக்கணித்துள்ளார்.
கூட்டத் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவில் நாட்டுப் பண் இடம் பெறுவதும் நீண்ட பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் நல் மரபாகும். இதற்கு மாறாக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுடன் இணைந்து தயாரித்த உரையை வாசித்து பேரவைக்கு வழங்க மறுத்து அமர்ந்து விட்டதும், நாட்டுப் பண் இசைக்கும் முன்பு வெளியேறியதும் ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!