Tamilnadu

மீண்டும் மீண்டும் மரபுகளை மீறும் ஆளுநர்... அவைக்குறிப்பில் நீக்கப்பட்டதை வெளியிட்டதால் சர்ச்சை!

நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்க மறுத்தார். மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற உப்புசப்பில்லாத காரணத்தை கூறி ஆளுநர் தனது உரையை புறக்கணித்தார்.

வழக்கமாக தமிழ்நாட்டில் எந்த அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படாது. மாறாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கும். அதேபோல் நிகழ்ச்சி முடியும்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவடையும். ஆண்டுதோறும் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட இதுவே மரபாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் முதல் நாளான இன்று இதனை ஒரு காரணமாக காட்டி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து தனது மாண்பை மீறியுள்ளார். இதையடுத்து ஆளுநரின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநரின் இந்த செயல் தற்போது பலர் மத்தியிலும் கண்டனங்களை வலுத்து வருகிறது. இதனிடையே கூட்டத்தொடரின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளுநர் தான் பேசிய உரையை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சுமார் 3.17 நிமிடம் உள்ள அந்த வீடியோவில் தேசிய கீதம் விவகாரத்தை பேசியிருப்பார். அந்த வீடியோ ஆளுநர் தமிழாக்கத்தோடு வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவை அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை ஆளுநர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது தற்போது மேலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

அதாவது சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது அனைத்தும் அவை குறிப்பில் இடம் பெறாது என்றும், அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம் பெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்திருந்தார். இதற்காக அவை முன்னவர் துரைமுருகன் சட்டபேரவை தீர்மானம் நிறைவேற்ற முன்மொழிந்தார். பின்னர் ஒரு மனதாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ஆளுநர் பேசியதை எந்த இடத்திலோ பயன்படுத்தக் கூடாது என்றும், அவர் பேசிய உரை வெளியிடக்கூடாது என்றும்தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநருடைய ராஜ்பவன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் ஆளுநர் பேசிய உரையை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்பேரவையின் விதிமீறல் செயலாகும்.

எனவே நாளை ஆளுநர் உரை மீதான விவாதத்தில் சட்டப்பேரவையில் உரிமை மீறல் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மரபுகளை மீறி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. முன்பாக தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் வெளியேறியதையும், உரையை வாசிக்காமல் புறக்கணித்ததையும் கண்டித்து #GetOutRavi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சட்டப்பேரவை விவகாரம் : “ஆளுநர் ரிமோட் மூலம் இயங்குபவர்...” - அமைச்சர் ரகுபதி பேட்டி !