Tamilnadu
”மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு போடும் கடிவாளம்” : உண்மையை விளக்கும் ஜெ.ஜெயரஞ்சன்!
14ஆவது நிதிக் குழுவின் காலமான 2015-16- இன் துவக்கத்திலிருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கிடும் நிதியின் அளவை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. ஒன்றிய அரசின் வரி வருவாயில் 42 சதவீதத்தை மாநிலங்களுக்கு ஒதுக்கிட 14ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது. இது 13ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையை விட 10 சதவீத புள்ளிகள் அதிகமாக இருந்தபோதும், அரசு மேற்கொள்ளும் இத்த கைய நடவடிக்கை விசித்திரமானதாகும். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாக மறு வரையறை செய்யப்பட்ட பின் அவற்றிற்கான நிதி ஒதுக் கீட்டை தவிர்த்துவிட்டு 41 சதவீதம் என்ற பரிந்துரை யையே 15ஆவது நிதிக் குழுவும் அளித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கையின் மூலம் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிடும் நிதியை குறைத்ததோடு மட்டுமின்றி, ஒன்றிய அரசின் விருப்பத்தின்படியான செலவுகளை அதிகரிக்கச் செய்திட தனது சொந்த மொத்த வருமானத்தை உயர்த்திக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் விருப்பப்படியான செலவுகள், மாநில அரசுகளின் பட்ஜெட்டின் மூலம் செயல்படுத்தப்படுவ தில்லை. எனவே, இவை வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும்.
வரி வருமானம் பற்றிய சில அடிப்படை கணக்கீடு
ஒன்றிய அரசின் நிகர வரி வருமானத்தில் மாநிலங்க ளின் பங்கின் அளவை நிதிக் குழு பரிந்துரைக்கிறது. மொத்த வரி வருவாய் மற்றும் நிகர வரி வருவாய் ஆகியவற்றின் இடையேயான வேறுபாட்டில் வரியை வசூலிப்பதற்கு ஆகும் செலவுகள், யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வரி வரு மானம் மற்றும் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் (சர்சார்ஜ்) ஆகியன அடங்கும். 14ஆவது மற்றும் 15ஆவது நிதிக் குழுக்கள் நிகர வரி வருவாயிலிருந்து முறையே 42 மற்றும் 41 சதவீத நிதி ஒதுக்கீட்டை பரிந்து ரைத்தபோதும், மொத்த வரி வருவாயில் 2015-16இல் இது 35 சதவீதமாகவும், 2023-24இல் (பட்ஜெட் மதிப்பீடு) 30 சதவீதமாகவும் மட்டுமே இருந்தது.
2015-26இல் 14.6 லட்சம் கோடி ரூபாய்களாக இருந்த ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாய், 2023-24இல் 33.6 லட்சம் கோடி ரூபாய்களாக அதிகரித்தபோதும், ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு என்பது மேற்கூறப்பட்ட ஆண்டுகளுக்கிடையே 5.1 லட்சம் கோடி ரூபாய்களிலிருந்து 10.2 லட்சம் கோடி ரூபாய்களாக மட்டுமே அதிகரித்துள்ளது. இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒன்றிய அரசின் வருவாய் இரண்டு மடங்கிற்கு மேல் அதிக ரித்துள்ளபோதும், அதில் மாநிலங்களின் பங்கு என்பது இரண்டு மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது.
மானியக் குறைப்பு - ஜிஎஸ்டி
மாநிலங்களுக்கான மானியங்கள் என்பதும் நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்படும் மற்றொரு சட்டப்பூர்வ மான நிதியளிப்பாகும். மானியங்களாக மாநில அரசுக ளுக்கு அளிக்கப்படும் நிதியின் முழுமையான தொகை யும் 2015-16இல் இருந்த 1.95 லட்சம் கோடி ரூபாய்கள் என்பதிலிருந்து 2023-24இல் 1.65 லட்சம் கோடி ரூபாய்க ளாகக் குறைந்துள்ளது. இவ்வாறாக, ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்படும் மொத்த தொகையின் அளவு 48.2 சதவீதம் என்பதிலிருந்து 35.32 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் வாயிலாக வசூலிக்கப்படும் வருவாய், யூனியன் பிரதேசங்களிலி ருந்து வசூலிக்கப்படும் வருவாய் மற்றும் வரி நிர் வகிப்பு தொடர்பான செலவினங்கள் ஆகியவற்றை கழித்து விட்டு, அரசின் நிகர வரி வருவாய் கணக்கிடப் படுகிறது. இக்காலகட்டத்தில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு வீழ்ச்சியடைந்த தற்கு இத்தகைய கணக்கீடு ஒரு காரணமாகும். மொத்த வரி வருவாயிலிருந்து கழிக்கப்படும் மேற்கூறப்பட்ட மூன்று காரணிகளில், செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் மூலமாக ஈட்டப்படும் வருவாய் அதிகமானதாகும்.
மேலும், இந்த வருவாய் அதிகரித்தும் வருகிறது. 2015-16இல் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் மூலமான வருவாய் (85,638 கோடி ரூபாய்) என்பது ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 5.9 சதவீதமாக இருந்தது. 2023-24இல் இத்தகைய வருவாய் 3.63 லட்சம் கோடி ரூபாய்களாக அதிகரித்து மொத்த வரி வருவாயில் 10.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜுன் 2022-லிருந்து செயல்படுத்தப்பட்டு வரும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி செஸ் தொகையை இக்கணக்கீடு தவிர்த்துள்ளது. குறிப்பிட்ட துறைகளில் தனது சொந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் ஆகிய பிரிவுகளின் கீழ் வரி வசூலை ஒன்றிய அரசு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், இவ்வாறு திரட்டப்படும் வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.
பெருமளவில் மையப்படுத்தப்படும் பொதுச் செலவினங்கள்
வரி வருவாயில் பகிர்வு அல்லது மானியங்கள் என்ற வகையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறையும்போது அல்லது ஒன்றிய அரசின் மொத்த வருவாயின் அதிகரிப்பு விகிதத்திற்கு ஏற்ப ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரிக்காதபோது, ஒன்றிய அரசு தனது விருப்பப்படி செலவிடுவ தற்கு பெரியதொரு நிதி கிடைக்கிறது. மாநிலங்க ளுக்கிடையேயான நிதி ஆதாரங்களின் பங்கீட்டில் சமத்துவத்தை இது பாதிக்கலாம். மத்திய நிதி யுதவி திட்டங்கள் (சிஎஸ்எஸ்) மற்றும் மத்திய துறை திட்டங்கள் போன்ற இரண்டு வழிமுறைகளின் மூலம் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நேரடி நிதி பரி மாற்றத்தை செய்திடலாம்.
மத்திய நிதியுதவி திட்டங்களுக்கான ஒரு பகுதி நிதியை ஒன்றிய அரசும் மீதியை மாநில அரசும் அளிக்க வேண்டும் என்பதால் மாநிலங்களின் முன்னு ரிமைகள் மீது ஒன்றிய அரசு தனது செல்வாக்கினை செலுத்துகிறது. ஆக, ஒன்றிய அரசு முன்மொழிகிற திட்டங்களை, தங்களது நிதியாதாரங்களை ஈடுபடுத்தி மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. 2015-16 மற்றும் 2023-24க்கு இடைப்பட்ட காலத்தில், 59 மத்திய நிதி யுதவி திட்டங்களின் மூலம் இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு 2.04 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 4.76 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வாறாக, ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதிக்கு கிட்டத்தட்ட இணையானதொரு நிதியை மாநில அரசு ஒதுக்கிட நிர்ப்பந்திக்கப்படுகிறது.
மேலும், மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் 2023-24இல் மாநிலங்களுக்கு 3.64 லட்சம் கோடி ரூபாய்கள் மட்டுமே உண்மையில் பரிமாற்றம் செய்யப் பட்டு, கிட்டத்தட்ட 1.12 லட்சம் கோடி ரூபாய்கள் இதர செலவுகளுக்காக ஒன்றிய அரசால் வைத்துக் கொள்ளப்பட்டது.
இரண்டு வித பாதிப்பு...
மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகைக்கு இணையான தொகையை தனது பட்ஜெட்டிலிருந்து ஒதுக்கும் நிலையில் உள்ள மாநிலங்கள் மட்டுமே, அத்தொகையை மானியமாக ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ள இயலும் என்பது இத்திட்டத்தின் முக்கியமான அம்சமாகும். இது பொது நிதியை அளிப்பதில் மாநிலங்களுக்கி டையேயான சமத்துவத்தில் இரண்டு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. நிதிவசதி கொண்ட மாநிலங்க ளுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் நிதிக்கு இணையான நிதியை அளிக்கும் திறன் இருக்கும். மேலும், மத்திய நிதியுதவி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அம்மாநிலங்களால் ஒன்றிய அரசின் நிதியை தங்களது மாநிலத்திற்கு பெற இயலும்.
நிதி வசதி இல்லாத மாநிலங்கள் தாங்கள் கடனா கப் பெறும் நிதியைக் கொண்டு இத்திட்டங்களுக்கான தங்களது பங்கு நிதியை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் இத்தகைய மாநிலங்களின் கடன் சுமை அதிகரிக்கிறது. மாநிலங்களின் பொது நிதிகளின் இத்தகைய வேறுபட்ட வழிமுறைகள், பொது நிதியில் மாநிலங்களுக்கிடையே சமத்துவமின்மையை வலி யுறுத்துகின்றன. மத்திய நிதியுதவி திட்டங்கள் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன.
மத்திய துறை திட்டங்கள் என்பன பிரத்யேக மான சட்டப்பூர்வமான அல்லது நிறுவனக் கட்டுப் பாடுகளை ஒன்றிய அரசு கொண்டுள்ள துறைகளில் ஒன்றிய அரசால் முழு நிதியும் அளிக்கப்பட்டு செயல் படுத்தப்படுகின்றன. 700க்கும் மேற்பட்ட மத்திய துறை திட்டங்களை செயல்படுத்த 2015-16இல் ஒன்றிய அர சால் ஒதுக்கப்பட்ட 5.21 லட்சம் கோடி ரூபாய்கள் 2023-24ல் 14.68 லட்சம் கோடி ரூபாய்களாக அதிகரித்துள் ளது. இதன் மூலம், மத்திய துறை திட்டங்களுக்கு பெரும் பங்கு நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்வது தெளிவாகிறது.
இத்தகைய திட்டங்களின் மூலம் குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது தொகுதிகளை பலனடையச் செய்யும் நோக்கத்துடன் ஒன்றிய அரசு நிதி ஆதா ரங்களை ஒதுக்கீடு செய்யலாம். இத்திட்டங்கள் ஒன்றிய அரசால் நேரடியாகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்பதால், 60.942 கோடி ரூபாய்கள் மட்டுமே 2023-24இல் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள் ளன. 2023-24இல் மத்திய நிதியுதவி திட்டங்கள் மற்றும் மத்திய துறை திட்டங்கள் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து 19.4 லட்சம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 4.25 லட்சம் கோடி ரூபாய்கள் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
கூட்டாட்சிக்கு எதிரான நிதிக் கொள்கைகளுக்கான வாய்ப்பு
மத்திய நிதியுதவித் திட்டம் மற்றும் மத்திய துறை திட்டங்கள் மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் சட்டரீதியான பரிமாற்றங்கள் அல்ல. ஏனெனில், இவை சட்டரீதியான அம்சங்களின் அடிப்படையிலோ அல்லது நிதிக் குழு தீர்மானித்த கணக்கீட்டின்படியோ இல்லை. இத்தகைய சட்டரீதியான பரிமாற்றமாக இல்லாத நிதி பங்கீடு என்பது ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 12.6 சதவீதமாக உள்ளது. 2023-24இல் சட்டரீதியான நிதி ஒதுக்கீடுகளையும் சேர்த்து மாநிலங்களுக்கு மொத்தமாக பகிர்ந்தளிக்கப்பட்ட நிதி என்பது ஒன்றிய அரசின் மொத்த வரி வருவா யில் வெறும் 47.9 சதவீதமாகவே இருந்தது.
மேலும், சட்டரீதியான பரிமாற்றமாக இல்லாத நிதி ஒதுக்கீடு என்பது கட்டுப்பாடுகளைக் கொண்ட தாகும். அதாவது, எந்த திட்டத்திற்காக அந்த நிதி ஒதுக்கப்பட்டதோ அந்த குறிப்பிட்ட திட்டத்திற்கு மட்டுமே அதனை செலவிட வேண்டும். பொதுச் செலவினங்களை மாநில அரசுகள் மேற்கொள்வதில் அதன் சுதந்திரத்தை இது வெட்டிச் சுருக்குகிறது. மொத்த வரி வருவாயில் 50 சதவீதத்திற்கும் கூடுத லான தொகையை தக்க வைத்துக் கொள்வதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதம் என்ற அளவுக்கு நிதிப் பற்றாக்குறையை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது. இவ்வாறாக, வரையறுக்கப்பட்ட செலவினப் பொறுப்புகளோடு மிகப் பெரிய அள விலான நிதி அதிகாரங்களை ஒன்றிய அரசு பயன் படுத்துகிறது.
மேலும், ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்க ளின் பங்கை 42 சதவீதத்திலிருந்து குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு வாதிட்டதாகவும், அதை 41 சதவீதமாக நிதிக் குழு தக்க வைத்ததாகவும் 15ஆவது நிதிக் குழு குறிப்பிட்டது. அதிக செலவின பொறுப்புகளை மேற்கோள் காட்டி, 16ஆவது நிதிக் குழுவின் முன்பும் இதே வாதத்தை ஒன்றிய அரசு வைத்திடலாம்.
கட்டுரையாளர்கள் : தமிழ்நாடு திட்டக்குழு
துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்
தமிழில் : எம்.கிரிஜா
நன்றி : தீக்கதிர்
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?