Tamilnadu

தமிழக மீனவர்களை வஞ்சிக்கும் இலங்கை கடற்படை : 19 மீனவர்கள் எல்லைத் தாண்டியதாக கூறி கைது!

தென் தமிழக மீனவர்கள், இந்திய பெருங்கடலில் மீன் பிடிக்க செல்வதற்கு தொடர் அச்சுறுத்தல் தந்து வருகிறது இலங்கை கடற்படை. கடந்த 40 ஆண்டுகளாகவே, இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து இலங்கை அரசின் மீதான வெறுப்புணர்ச்சி, தமிழக மக்களிடமும் ஊடுருவியுள்ளது. தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றாலே, அவர்கள் கைது செய்யப்படுவார்களோ அல்லது படகுகள் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்திலேயே மீனவர்கள் தொழில் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் பலமுறை எடுத்துக்கூறியும், சரியான நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. அண்மையில், ஒன்றிய பா.ஜ.க அரசின் அரசியல் தேவைக்காக, தமிழகத்திற்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது மீனவ மக்களை சந்தித்தார். ஆனால் அதன் பின்னரும் மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

ஒன்றிய அரசு தனது அதிகாரத்தை கொண்டு தமிழக மீனவர்களின் பிரச்னைகளை தீர்க்க முடியும். ஆனால், அதனை ஒன்றிய பா.ஜ.க செய்ய விரும்பவில்லை என்ற எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 19 மீனவர்களை, எல்லைத் தாண்டினார்கள் என காரணம் காட்டி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

Also Read: சிறையிலேயே கர்ப்பமாகும் பெண் கைதிகள்... பிறந்த 196 குழந்தைகள்... - கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு !