Tamilnadu
”பெண்களின் முன்னேற்றமே திராவிட மாடல் அரசின் முதல் நோக்கம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
ஈரோடு சோலார் புதிய பேருந்து வளாகத்தில் நேற்று (வியாழக்கிழமை) அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 337 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 100 கோடியே 36 லட்சம் அளவிற்கு வங்கிக் கடன் இணைப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு `மகளிர் மேம்பாட்டு நிறுவனம்’, `வாழ்ந்து காட்டுவோம் திட்டம்’, `நகர்புற வாழ்வாதார இயக்கம்’ போன்றவற்றின் மூலம் 2 ஆயிரத்து 504 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்பை இன்று வழங்கிட, நம் முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் இன்றைக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 337 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 100 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்க, வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். பெருமை அடைகின்றேன்.
ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு, நெடுஞ்சாலை, வேளாண்மை, பள்ளிக்கல்வி, நீர்வளம் உள்ளிட்ட ஒன்பது துறைகளுக்கு 209 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பது மற்றும் அடிக்கல் நாட்டுகின்ற நிகழ்ச்சிகளும் இங்கே உங்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளன.
ஈரோடு வந்தாலே எனக்குள் ஒரு மகிழ்ச்சி பொங்குவதற்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் இருக்கின்றது. ‘பகுத்தறிவுப் பகலவன்’, ‘சுயமரியாதைச் சூரியன்’, ‘பெண் விடுதலைக்கான போர்க்குரல்’ தந்தை பெரியார் பிறந்த மண் இது. நம் `திராவிட இயக்கத்தின் தொட்டில்’ என்று இந்த ஈரோடு மாவட்டத்தைச் சொல்லலாம்.
பெண்கள் தங்களுடைய செலவுக்கு தன்னுடைய தந்தையையோ, கணவனையோ, அண்ணனையோ, தம்பியையோ எதிர்பார்க்க வேண்டிய நிலைமையை மாற்றி, கிராமப்புறத்தில் இருக்கின்ற பெண்களும் பொருளாதாரச் சுதந்திரத்தோடு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கிட்டத்தட்ட முப்பது வருடத்திற்கு முன்பு மகளிர்சுய உதவிக்குழுவை இந்தியாவிலேயே முதன் முறையாகத் தொடங்கினார்.
நம்முடைய திராவிட மாடல் அரசு, இன்றைக்கு அந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு குக்கிராமத்திலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். நம்முடைய திராவிடமுன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து நமது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இப்பொழுதுவரை 12 லட்சத்து 22 ஆயிரத்து 803 சுய உதவிக் குழுக்களுக்குச் சுமார் 69 ஆயிரத்து 554 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது, என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பெண்களுடைய முன்னேற்றம்தான் இந்தத் திராவிட மாடல் அரசின் முதன்மையான நோக்கம். அதற்காகவே, இந்த அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், அந்த மொத்த குடும்பமே படித்ததற்கு சமம் என்று சொல்வார்கள். காரணம், அந்தப் படித்த பெண் தனது குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பார்கள். அந்தக் குழந்தைகள் நல்ல முறையில் வளர்ந்து நல்ல வேலைக்குப் போவார்கள். அந்தக் குடும்பமே முன்னேறும். அதனால்தான் பெண்களுக்குக் கல்வி மிக மிக முக்கியம்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!