Tamilnadu
”உலக அளவிற்கு செல்லும் தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
விளையாட்டில் மறுமலர்ச்சிக்கான சர்வதேச மாநாடு (International Congress On Renaissance in Sports) திருச்சி தேசிய கல்லூரியில் 7-ஆம் தேதி (நேற்று) தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அறிவியல் துணையுடன் விளையாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது குறித்த இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் நாம் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். தொழில்நுட்ப முன்னேற்றம், சமூக மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் விளையாட்டுக் களங்கள் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நேரத்தில், நாம் பல சவால்களைச் சந்தித்து, பல புதுமைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த மாநாட்டின் கருப்பொருள், ‘நவீன விளையாட்டுக்களில் மறு மலர்ச்சிக்கான திட்டங்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்பதாகும். இதன் பொருள் விளையாட்டில் மறுமலர்ச்சி உண்டாக வேண்டுமென்றால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான். அதை எப்படி மேற்கொள்வது என்பதை ஆராய்வதற்குத்தான் நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம்.
அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய மூன்றையும் ஒரே புள்ளியில் இணைக்க, கருத்துகளும் ஆலோசனைகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மேலும் மதுரையில், சர்வதேச விளையாட்டு அறிவியல் மையம் ஒன்றை ‘தமிழ்நாடு புத்தாக்க முன்னெடுப்புத் திட்ட’த்தின் கீழ் அமைத்துள்ளோம்.
இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. விளையாட்டில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சி முதல் விளையாட்டுத் துறை சார்ந்த சமீபத்திய ஆய்வுகள் வரை நிபுணர்கள் தங்களின் கருத்துகளை வழங்க இருக்கிறார்கள். விளையாட்டுத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அதற்கேற்றாற் போன்ற புதுமையான பயிற்சி முறைகள் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்களை எப்படி எதிர்கொள்வது போன்ற விஷயங்கள் குறித்துப் பேசப்பட உள்ளன.
6வது கேலோ இந்தியா போட்டிகளை நாம் நடத்தி முடித்து ஒரு வாரம் ஆகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமார் 5 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட வீரர்களை இங்கே தங்க வைத்து, உபசரித்து, கவனித்துக் கொண்டது. சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் அந்தப் போட்டிகள் 12 நாட்களுக்கு நடைபெற்றன. மேலும் பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்தது. ‘கேலோ இந்தியா’ போட்டி வரலாற்றில், தமிழ்நாடு பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறை என்பதைப் பெருமையுடன் நான் இங்கே கூற விரும்புகிறேன்.
நாம் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி, உலக அலைச்சறுக்கு போட்டி, சைக்கிள் பந்தயப் போட்டி, தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை செஸ் மாஸ்டர்ஸ் ஆகிய போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம்.
விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு பல சாதனைகளைச் செய்து வரும் இந்த வேளையில், இங்கு நடைபெறும் இந்த மாநாடு, தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை இன்னும் பல உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்பதில் எனக்குச் சிறு அளவும் சந்தேகமில்லை." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!