Tamilnadu
ஸ்பெயினிலிருந்து ரூ.3,440 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய கி.வீரமணி !
ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற முதலமைச்சர் அங்கு ரூ.3,440 கோடி தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமிழ்நாடு திரும்பினார். இந்த நிலையில், முதலமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "இந்தியத் திருநாட்டின் ஒப்பற்ற ஆளுமை நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது; அதற்குக் காரணம், அதில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ‘திராவிட மாடல்’ ஆட்சி, முன்னால் நடைபெற்ற திராவிட ஆட்சிகளைத் தொடர்ந்து - நீதிக்கட்சி ஆட்சி, அறிஞர் அண்ணா, கலைஞர் ஆட்சிகளின் வழித்தடத்தில் மேலும் வலிவாகவும், பொலிவாகவும் பீடுநடை போட்டு, ஒவ்வொரு துறையிலும் சாதனைகளைச் சரித்திரங்களாக்கி வருவதை நம் நாடு மட்டுமல்ல, உலகமே கண்டு வியந்து பாராட்டுகிறது.
முதல் மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு
ஏராளமான பேர் - மனுவின் விதியை மாய்த்து, எல்லோருக்கும் கல்விக் கண்ணை - அதிலும் காலங்காலமாய் கடைக்கோடியில் தடுப்புச் சுவர் அமைத்துத் தாண்டிவர முடியாத தடைகளை உருவாக்கி, தடுக்கப்பட்ட மகளிரைக் கல்வியை பாய்ந்தோடும் ஆறாகக் காட்டி, அவர்களும் பயனுறும் வகையில் வழங்கிய பரந்துபட்ட பயன் காரணமாக, வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு குடும்பத்திலும் அதிகம்! முந்தைய நாள் உடலுழைப்புக்காரர்களாகவே இருந்த கோடானு கோடி ஒடுக்கப்பட்டோர் சமூகமாக இருந்த நமது சமூகம் கற்றுத் தேர்ந்து, வேலை வாய்ப்புக் கிட்டவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சு விட்டு நின்றிடும் வேளையில், அவர்களது வாழ்வாதாரம் வளம்படுவதற்கான வேலை வாய்ப்புக்கு முக்கிய வழி, தொழில் வளத்தைப் பெருக்குவதே! அதற்கு உள்நாட்டு முதலீடுகள் மட்டும் போதாது; வெளிநாடுகளில் உள்ளவர்களின் புதிய தொழில் முதலீடுகளும் வரவேண்டும். அதனைப் பெற அனைத்து சூழல்களையும், தேவைகளையும் உருவாக்கி, அவர்களது நன்னம்பிக்கையைப் பெற்று, வளர்ச்சியை, வாயால் வரையாது, செயலால் நிலைநிறுத்தும் செயற்பாடுகளுக்காகவே உலக நாடுகளின் தொழில்முனைவோர், தங்கள் நாட்டின் முதலீடு உற்பத்திச் செலவினங்களைவிட, இந்தியா போன்ற நாடுகளில் செலவினம் குறைவது, தரத்தோடு பொருள்களைத் தயாரித்துத் தருவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடுதான் விளங்குகிறது என்ற பரவலான நம்பிக்கையை, நமது முதலமைச்சர் உருவாக்கி விட்டதால், உலகின் பல நாடுகள் தமிழ்நாட்டிற்கு வந்து முதலீடு செய்ய ஆயத்தமாகியுள்ளன!
தொழில்துறையில் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழக் காரணம்!
அதைப் பக்குவமாகப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் சென்ற மாதங்களில் உலக முதலீடுகளை ஈர்க்கும் பயனுறு மாநாட்டை நடத்தி, பல தொழில் ஒப்பந்தங்களை தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு ஈர்த்தது. நிறைய பல கோடி முதலீடுகள், ஒப்பந்தங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நமது முதலமைச்சர் தனது தொழில் துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்று, சுமார் ரூ.3,440 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு, வெற்றிகரமான பயணமாக தனது குழுவின் பயணத்தை மிகச் சிறப்பாக செய்து முடித்துத் திரும்பியுள்ளார்! இந்த முயற்சிகளை அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‘‘நியூயார்க் டைம்ஸ்’’ பத்திரிகை வெகுவாகப் பாராட்டிச் செய்திக் கட்டுரைபோல் வெளியிட்டிருப்பது ‘திராவிட மாடல்’ ஆட்சி எப்படி தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான செயல்திறத்துடன் சாதிக்கும் ஆட்சியாக இருக்கிறது என்பதற்கான சிறந்த சாட்சியம் ஆகும்!
தமிழ்நாடு இப்படி தொழில் துறையில் சிறந்து மேலோங்கி வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம், இங்குள்ள ஓர் ஆட்சி நிலையான ஆட்சி (Stable Government) அது மட்டுமா? திறமையான வெளிப்படையான ஆட்சி (Able and Transparent Government) என்ற பெருமையையும் பெற்றுள்ளது!
‘நியூயார்க் டைம்ஸ்’ பாராட்டுகிறது!
‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு ஒரு முக்கிய காரணத்தைச் சுட்டிக்காட்டி, தனது கணிப்பினை உலகுக்குப் புரிய வைக்கிறது.இங்கு, தமிழ்நாடு அரசின்கீழ் அமைந்துள்ள மனிதவள மேலாண்மை மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது! தொழில் முனைவோருக்கான தக்க பாதுகாப்பு - பணியாற்றுவோருக்கும், முதலீடு செய்வோருக்கும் இடையில் அரசு நல்லதோர் பாலமாகவும் செயல்பட்டு, இருசாராருக்கும் இணக்கமான செயலை ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திச் செல்வதே மூலகாரணம்.
ஸ்பெயின் நாட்டிலிருந்து அன்று ஹீராஸ் பாதிரியார் - இன்று சமுகநீதிக்கான சரித்திர நாயகர்!
ஸ்பெயின் நாட்டிலிருந்து ‘திராவிடன் வந்துள்ளார்’ என்று ‘திராவிடம்‘பற்றி முன்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் (நாவலர், பேராசிரியர் படிக்கும்போது) தமிழ் மன்றத்தில் பெருமையுடன் பேசினார் மொகஞ்சதாரோ, ஹரப்பா பற்றிப் பேசிய ஹீராஸ் பாதிரியார். அந்தப் பண்பாட்டு உறவை நமது ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மீண்டும் புதுப்பித்துள்ளார் - அங்குள்ள நம் மக்களிடம் உரையாற்றியும்கூட!
வெற்றியோடு திரும்பிய நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் நமது நல்வரவேற்பும், பாராட்டும், வாழ்த்துகளும்! " என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!