Tamilnadu

அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக் கூறி 1 கோடியே 69 லட்சம் மோசடி : 5 பேரை கைது செய்த தமிழ்நாடு போலிஸார் !

திருப்பூரில் அங்குராஜ் என்பவர் நூல் கமிசன் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரது நண்பர்கள் துரை ,சுந்தரபாண்டியன் , உதயசங்கர், முருகவேல் ஆகியோர்களிடம் வாட்ஸ் அப் மூலம் விஜய் கார்த்திக் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். அவர் தான், ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக இருப்பதாகவும் தங்களது நிறுவன வங்கி கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தற்போது கோவை , திருப்பூர் , ஈரோடு போன்ற ஊர்களில் நிறுவனத்தின் சார்பில் பெரிய அளவில் கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் அதற்குண்டான பில்டிங் மெட்டீரியல் மற்றும் இதர செலவுகளுக்கு ரொக்கப்பணம் தேவைப்படுவதாகவும் , ரொக்கப்பணம் வழங்கப்படும்பட்சத்தில் கம்பெனியிலிருந்து இரண்டு மடங்கு பணம் சம்பந்தப்பட்டவர்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக மணி டிரான்ஸ்பர் செய்யப்படும் என ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளனர்.

இதை நம்பி அங்குராஜ் மற்றும் அமாவாசை ஆகிய இருவரும் தங்களுக்கு தெரிந்த வேறு சில நபர்களிடம் ஒரு கோடியே 69 லட்சம் ரொக்கமாக பெற்று, கடந்த மாதம் 30 ஆம் தேதி விஜய் கார்த்திக் என்பவருக்கு வீடியோ கால் செய்து பணத்தை கட்டியுள்ளனர். இதற்கு பின்பு சிறிது நேரம் கழித்து அங்குராஜின் நூல் கடைக்கு வந்த ஐந்து நபர்கள் கொண்ட கும்பல் அமலாக்க துறையைச் சேர்ந்தவர்கள் என அறிமுகம் செய்து கொண்டு பல்வேறு விவரங்களை கேட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்பு கணக்கில் வராத பணம் இருப்பதாக கூறி கடையில் இருந்த ஒரு கோடியே 69 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கடையில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கழற்றி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி நேரில் வந்து பணத்தை கணக்கு காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறிச் சென்று விட்டனர்.

அதன் பின்னர் சென்னை சென்றபோது அமலாக்கதுறையினர் பெயரால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அங்கு ராஜ் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ஈடுபட்ட தனிப்படை காவல்துறையினர் வழக்கில் சம்பந்தப்பட்ட விஜய் கார்த்தி, நரேந்திரநாத், ராஜசேகர் , லோகநாதன் மற்றும் கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 88 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் உட்பட மூன்று கார் , விலை உயர்ந்த செல்போன் என ஒரு கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் , வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடி வருவதாகவும் விரைவில் அவர்களும் கைது செய்யப்பட்டு களவு போன பொருட்கள் மீட்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறி ஏமாற்றிய பாஜக அரசு : ம.பி-யில் சோகம் !