Tamilnadu

குண்டர்களை வைத்து விவசாயியை மிரட்டும் அதிமுக MLA : சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியேரி பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி. இவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் தனது மகனுக்காக வீடு கட்டுவதற்காக முதல் கட்ட பணிகளை விவசாயி குப்புசாமி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவரது நிலத்திற்கு அருகே ஓமலூர் அ.தி.மு.க பிரமுகரின் நிலம் உள்ளது. இதனால் விவசாயி குப்புசாமி வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாயின் நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

இதனையும் மீறி விவசாயி குப்புசாமி வீடு கட்டுவதற்கான பணிகளைத் துவங்கிய போது, ஓமலூர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மணி மற்றும் அவரது தந்தையான ஊராட்சி மன்ற தலைவர் இருவரும், விவசாயி குப்புசாமியிடம் இங்கு வீடு கட்ட கூடாது என குண்டர்களை வைத்து மிரட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விவசாய குப்புசாமி தனது மனைவி மற்றும் மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், "தனது சொந்த நிலத்தில் வீடு கட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மணி தடையாக உள்ளார் என்றும், தங்களது சொந்த நிலத்தை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் குண்டர்களை வைத்துத் தொடர்ந்து மிரட்டும் அ.தி.மு.க எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களது நிலத்தில் வீடு கட்ட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் கடந்த தேர்தல்களில் அதிமுகவிற்கு தங்களது குடும்ப வாக்களிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தங்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் விவசாயி குப்புசாமி கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். விவசாயி ஒருவரை நிலத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிரமிக்கும் நோக்கில் செயல்படுவதாக எழுந்த புகார் சேலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு" - நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்த திருச்சி சிவா MP !