Tamilnadu

மதுரை எய்ம்ஸ் காலதாமதம் ஏன்? : கதிர் ஆனந்த் MP கேள்விக்கு ஒன்றிய அரசு சொன்ன அதிர்ச்சி பதில்!

ஒன்றிய அரசின் கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. பின்னர் பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியில் காலதாமதம் ஏன் என வேலூர் நாடாளுமன்ற தி.மு.க உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், "தமிழ் நாட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கு, எல்லைச் சுவர் கட்டுவது உள்ளிட்ட முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன. திட்ட மேலாண்மை ஆலோசகர் (PMC) நியமிக்கப்பட்டுள்ளார். மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய சிவில் பணிக்கான தொழில்நுட்ப மற்றும் நிதி ஏலம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 26, 2021 அன்று ஜப்பான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, கடன் தொகை ஜப்பானிய யென் 22,788,000,000 மட்டுமே.

மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதி அக்டோபர், 2026 ஆகும். இந்திய அரசு திட்டத்தின் முன் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக ரூ.12.35 கோடி மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மேலாண்மை ஆலோசனைக்கு ரூ.6 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.

Also Read: அடுக்கடுக்காக வைக்கப்பட்ட கேள்விகள்: திக்குமுக்காடிய ஒன்றிய அரசு!