Tamilnadu
கற்பனையான கருத்துகளை தவிர்ப்பது நல்லது -கோயம்பேடு இடம் பற்றிய அன்புமணியின் அறிக்கைக்கு அமைச்சர் சேகர்பாபு
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள வ.உ.சி சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன பொது கழிப்பிடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து, அங்கு கட்டமைப்புள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், கோயம்பேடு பேருந்து கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தை தனியாருக்கு வழங்கவுள்ளதாக அன்புமணி ராமதாஸின் அறிக்கை முற்றிலும் வதந்தி என்றார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “ இன்னும் திருமணமே முடியாமல் குழந்தைக்கு பெயர் வைப்பதா, இன்னும் அந்த இடத்தை எந்த பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்ற முடிவை கூட எடுக்காத நிலையில், துபாயில் உள்ள ஒரு சேக்கை மேற்கோள் காட்டி இருப்பது விசித்திரமாக உள்ளது. இந்த ஆண்டு முடியும் வரை அன்புமணி ராமதாஸின் கருத்து தான் தலைசிறந்த நகைச்சுவையாக இருக்கும்.
கோயம்பேடு பேருந்து நிலையம் 66 ஏக்கர் பரப்பளவு அல்ல, 37 ஏக்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பயன்படுத்தி வந்தது, 6 ஏக்கர் நிலம் ஆம்னி பேருந்துகள் பயன்படுத்தி வந்தன. மொத்தமான 43 ஏக்கர் நிலத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் எந்த பணியை மேற்கொள்ளலாம் என தனி குழு உருவாக்கி அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
அவர்களின் அறிக்கை இன்னும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு வழங்கப்படவில்லை. அந்த அறிக்கைக்கு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பின்பு, தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு உகந்த பயனுள்ள திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். ஒரு அரசியல் கட்சியில் இது போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கற்பனையான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது.
வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், வேலூர் மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் படிப்படியாக ஏற்பாடு செய்யப்பட்ட பின்பு, முழுவதுமாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.” என்றார்.
முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது.” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அன்புமணியின் இந்த அறிக்கை முற்றிலும் தவறு என்றும், ஒரு அரசியல் கட்சியில் இது போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கற்பனையான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!