Tamilnadu
Fact Check : ‘கோயம்பேட்டில் லுலு மால்?’ - பரவும் செய்தியின் உண்மை என்ன? - தமிழ்நாடு அரசு விளக்கம்!
நாள்தோறும் சென்னைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்தே இயங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருந்து வந்தது.
மேலும் இவ்வாறு இங்கிருந்து கிளம்பும் பேருந்துகள், சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல்களில் இந்த பேருந்துகளும் சிக்கி, மேலும் மக்களுக்கு இடையூறாகவே இருந்து வந்தது. பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வந்த இந்த பிரச்னையை தமிழ்நாடு அரசு முடிக்க நினைத்து, புதிய பேருந்து நிலையத்தை அமைக்க திட்டமிட்டது.
அதன்படி கிளம்பாக்கத்தில் 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்' அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாக அறியப்படும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், தற்போது கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தை தனியாருக்கு கொடுக்கப்போவதாகவும், அங்கே லுலு மால் வரப்போவதாகவும் தற்போது தமிழ்நாடு அரசு வெளியிடாத செய்தி ஒன்று வைரலாகி வரும் நிலையில், அது முற்றிலும் தவறு என்று அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வதந்தியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் உண்மை போல் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் 66.4 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த செய்தி தற்போது தவறு என்று அமைச்சர் சேகர்பாபுவும், தமிழ்நாடு அரசும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “கோயம்பேடு பேருந்து நிலையம் 66 ஏக்கர் பரப்பளவு அல்ல, 37 ஏக்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பயன்படுத்தி வந்தது. 6 ஏக்கர் நிலம் ஆம்னி பேருந்துகள் பயன்படுத்தி வந்தன. மொத்தமான 43 ஏக்கர் நிலத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் எந்த பணியை மேற்கொள்ளலாம் என தனி குழு உருவாக்கி அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
அவர்களின் அறிக்கை இன்னும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு வழங்கப்படவில்லை. அந்த அறிக்கைக்கு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பின்பு, தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு உகந்த பயனுள்ள திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். ஒரு அரசியல் கட்சியில் இது போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கற்பனையான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இண்ட பொய்த்த்கலை உண்மை என்று நம்பி, அரசியல் கட்சியினர் சிலரும் தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு வீட்டுவசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி, இந்த தகவல் அனைத்து முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!