Tamilnadu

UGC அறிவிப்பு : “இட ஒதுக்கீடை கொலை செய்வதற்கான சம்மட்டி அடி இது...” - அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் !

இந்தியாவில் உள்ள கல்வி, அரசு வேலைகளில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இடம்பெறுகிறார்கள் என்பதால் நாட்டில் இடஒதுக்கீடு முறை பல போராட்டங்களுக்கு பின்னர் அமல்படுத்தப்பட்டது. ஆனால் சிலர், சாதிய பாகுபாட்டை நீக்கி சமத்துவத்தை கொண்டு வரவே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது என்பதை மறைத்து, இடஒதுக்கீட்டால்தான் சாதி இருக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

அதேபோல கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஒன்றிய அரசின் ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பெரும்பாலும் உயர்சாதியினரே கல்வி கற்று வரும் நிலையில், OBC, SC, ST மற்றும் சிறுபான்மை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது.

அதிலும், சமீப காலமாக அங்கு SC, ST மற்றும் OBC மாணவர்களின் தற்கொலை என்பது தொடர் கதையாக வருகிறது. ஐஐடி கல்வி நிறுவனங்ளில் ஆசிரியர் பணியிடங்களில் பெரும்பாலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படாத நிலையில், அங்கு உயர்சாதி என சொல்லிக்கொள்ளும் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர். இதற்கு அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படாததே காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசின் நிறுவனமான பல்கலைக்கழக மானிய குழு (UGC) வெளியிட்டுள்ளது. அதில், OBC, SC & ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள காலியிடங்களை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் Group A & B இடங்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் அனுமதியோடு பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கலாம் என்றும், Group C & D இடங்களுக்கு அந்தந்த பல்கலைக்கழக நிர்வாக குழுவே அந்த முடிவை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசின் பணியிடங்களில் OBC, SC & ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அதனை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கும் வகையில் பாஜக அரசு இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜகவின் "சப் கா விகாஸ்" (அனைவரின் வளர்ச்சிக்காக) என்பதின் உண்மை முகம் இதுதான். இதுவரை காலைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்து விட்டார்கள்.

இந்திய நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டு கொள்கையை கொலை செய்வதற்கான சம்மட்டி அடி இது. சமூகத்தில் நிலவும் சாதி மேலாதிக்கத்திற்கு சட்டபூர்வமாக அங்கீகாரமும், பாதுகாப்பும் வழங்குவதே பாஜகவின் ராம ராஜ்யத்தில் "அனைவருக்குமான வளர்ச்சி" என்று இதன் மூலம் பொருள் கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே நாடு முழுக்க பல கல்லூரிகள் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை பொதுப்பிரிவினருக்கு தாரைவார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருக்கின்றன. இந்த தவறான போக்கை சரிசெய்ய நாம் கோரிக்கை வைத்தால், பாஜகவோ அந்த தவறையே நிறுவனமயப்படுத்துகிறது.

ஒன்றிய அரசின் கீழ் உள்ள துறைகளில் இட ஒதுக்கீட்டில் வரும் பணியிடங்களில் பாதிக்கு பாதி நிரப்பப் படாமலேயே உள்ளன. அவற்றை எப்போது நிரப்புவீர்கள் என்று பலவருடங்களாக பாராளுமன்றத்தில் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம். நாம் எழுப்பும் கேள்விக்கு பாஜகவின் தீர்வு இது போன்ற அரியவகை "சப் கா விகாஸ்" ஆக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ஏற்றதாழ்வை போதிக்கும் ஆரிய சனாதான சாதீய பாகுபாடு பாஜக-விற்கு இவ்வாறே கற்றுக் கொடுத்து இருக்கிறது.

இந்தியாவில் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் வஞ்சகம் செய்து அமர மக்களை அழித்து ஒழிக்கும் பாஜகவின் முயற்சியை சமத்துவம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்டஅனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "ஆளுநர்கள் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" - சபாநாயகர் அப்பாவு !