Tamilnadu

"வரலாறு இல்லாத கூட்டம் பாஜக, அவர்களிடம் இருப்பது துரோக வரலாறு மட்டுமே" - காங்கிரஸ் விமர்சனம் !

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளை பற்றி தவறாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "உளவு பார்க்கும் பின்னணி கொண்டவர் ஆளுநர்,தமிழ் நாட்டுக்கு தேவையில்லை. பாஜகவுக்கு தலைவர்கள் இல்லாததால் எங்கள் தலைவர்களை பிடித்து கொண்டார்கள். வரலாறு இல்லாத கூட்டம்தான் பாஜக. துரோக வரலாறு தவிர வேறு வரலாறு பாஜகவுக்கு இல்லை..

உண்மையை சொல்லி கலைஞர் 5 முறை முதலமைச்சராக வந்தார். அனைவரையும் சகோதரர்களாக நினைத்தவர் காந்தி. ஆனால், தோழமை உணர்வு இல்லாத ஒரு அரசியில் கட்சி பாஜக. எப்போதும் வன்முறை கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் இயக்கம் பாஜக. கொள்கை ரீதியான இயக்கம்தான் மக்கள் மத்தியில் வெற்றி பெறும். மகாத்மாவிடம் கொள்கை இருந்தது, ஆர்.எஸ்.ஸிடம் அது போன்று எதுவும் இல்லை" என்று கூறினார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை, "முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், ஆங்கிலேயர்கள் தான் ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்தனர். ரவி ஏன் ஆளுநர் மாளிகையில் தங்க வேண்டும், அவருக்கு பசுமை வழி சாலையில் இடம் கொடுங்கள். ஆளுநருக்கு முதலில் வரலாறு தெரியாது, ரவிக்கு ஒரு மார்க் கூட போட முடியாது, அவர் படித்தாரா இல்லை என்று தெரியவில்லை எந்த ஒரு தகுதியும் இல்லாதவர் ஆளுநர்.

ஆளுநர் செய்வதை பார்த்து மோடி ரசித்து கொண்டு இருக்கிறார். அவர் இந்திய ஆளுநரா இல்லை பிரிடிஷ் ஆளுநரா என்று தெரியவில்லை.ஒரு வட்ட செயலாளராக கூட இருக்க தகுதி இல்லாதவர் ஆளுநர் ரவி வரலாற்று திரிபுகளை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் ஆளுநர், தமிழ்நாடு ஆளுநர் ரவி ஜனாதிபதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் வெகுஜன போராட்டம் வெடிக்கும்" என்று கூறினார்.

Also Read: "ஆளுநர்கள் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" - சபாநாயகர் அப்பாவு !