Tamilnadu
“பாஜகவின் அரசியலை வடமாநில மக்கள் நம்பத் தயாராக இல்லை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
சென்னை அண்ணா நகரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ்நிலத்தில் இந்தி மொழி ஆதிக்கத்தை நிறுவ முயன்றவர்களை எதிர்த்து -
'இருப்பது ஒரு உயிர், அது போகப் போவது ஒரு முறை, அது இந்த நாட்டுக்காக மொழிக்காகப் போகட்டுமே!' என்று தமிழ் காக்க உயிரையும் விலையாய் கொடுத்த வீர மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள், இந்த நாள்!
தமிழ்நாடு இதுவரையில் எத்தனையோ மொழிப்போர் களங்களைச் சந்தித்திருக்கிறது. எத்தனையோ மான மறவர்களை மொழிப் போர்க்களத்தில் இழந்திருக்கிறது. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று தலை நிமிர்ந்து நான் இங்கு நிற்கிறேன், மொழிப் போர்க்களக் களத்தில் அரசியல் தலைவர்கள் மட்டும் நிற்கவில்லை. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா கலைஞர் ஆகியோரோடு தமிழறிஞர்களும் நின்றார்கள். சமயத் துறவிகளும் நின்றார்கள்.
உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுபவர்கள் அத்தனை பேரும் நின்றார்கள். ஆண்கள் மட்டுமா நின்றார்கள்? சரிக்குச் சமமாக பெண்களும் நின்றார்கள். பெண்கள் தனியாகவா வந்தார்கள்? தங்கள் குழந்தைகளையும் சேர்த்து அழைத்துக் கொண்டு வந்தார்கள். இன்னும் சில தாய்மார்கள் தங்கள் கைக் குழந்தைகளோடு வந்தார்கள். உலகத்தில் எந்த மொழிக்காகவும் இப்படி ஒரு போராட்டம் நடந்திருக்காது. அத்தகைய போராட்டம் தான் மொழிப் போராட்டம் ஆகும். இதனைச் சொல்லும் போது தமிழன் என்று சொல்லடா- தலைநிமிர்ந்து நில்லடா - என்ற இறுமாப்புடன் நான் நிற்கிறேன்! தமிழுக்காக உயிர் நீத்தவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள்!
1938-ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தில் கைதாகி 1939-இல் சிறையில் மறைந்த நடராசனும் தாளமுத்துவும்- 1965-ஆம் ஆண்டு- தூக்கி நின்ற துப்பாக்கிக் குண்டுக்கு- மார்பு காட்டி நின்ற அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் படையில் சிவகங்கை இராசேந்திரனும் 1965 மற்றும் 1966-ஆம் ஆண்டுகளில் தங்களது தேக்குமர தேகத்தை தீயால் எரித்துக் கொண்ட கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, ‘மாணவமணி’ மயிலாடுதுறை சாரங்கபாணி போன்றோரும் - அமுது அருந்துவது போல விஷம் அருந்தி மறைந்த கோவை பீளமேடு தண்டபாணி, கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம் போன்றோரும் - இன்றைக்கும் படங்களாக இருந்து உணர்வுகளில் நிறைந்து நம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தியாகிகள் அனைவருக்கும் எனது வீரவணக்கத்தை நான் செலுத்துகிறேன். இவர்கள்தான் தமிழ்த்தாயின் புதல்வர்கள்! தமிழ்த்தாயின் பால் அருந்தி வளர்ந்த இந்தப் பிள்ளைகள்தான், தங்கள் உயிரைத் தந்து தமிழ்த்தாயைக் காத்தவர்கள்!
இந்தப் போராட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற 1967 தேர்தலில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக ஆட்சி அமைத்தது. யாரால் ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்தவர் அல்ல பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழ் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்த பிறகுதான்
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி தொடங்கியது. அது தமிழன் ஆட்சியாக நடந்தது. இன்றைக்கு உலகம் முழுக்கதமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இந்த இருமொழிக் கொள்கைதான் காரணம்!. மொழிப்பற்று என்பதை அதன் பெருமை பேசுவதோடு நிறுத்திக் கொள்பவர்கள் அல்ல நாம். மொழி அறிவை, கல்வி அறிவோடு இணைத்தவர்கள் நாம். இன்றைக்கு தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது .
முதலமைச்சர் அண்ணா, 'என்னாலானதைச் செய்துவிட்டேன், இனி மைய அரசு தன்னாலானதைச் செய்து கொள்ளட்டும். நான் குறுக்கே நிற்கப்போவதில்லை. தியாகத்தை செய்ய நாங்கள் தயார்! என்று ஆட்சியைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் பேசினார். அத்தகைய பாரம்பர்யத்துக்கு சொந்தக்காரர்கள் நாம். இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசானது இந்தி மொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளது. இதன் மூலமாக இந்தி பேசும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறது பாஜக.
பாஜகவுக்கு அதிகம் வாக்களிப்பவர்கள், வடமாநிலத்தைச் சேர்ந்த இந்தி பேசும் மக்கள் என்றால், அவர்களுக்காவது ஏதாவது நன்மை செய்துள்ளார்களா? கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்களா? ஊரடங்கு செய்யப்பட்டதால் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு கூட இந்தி பேசும் மக்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தித் தராத கட்சி தான் பாஜக. பல நூறு கிலோ மீட்டர் தூரம் மக்கள் நடந்து தங்களது ஊருக்கு போன கொடுமையைப் பார்த்து நாம் கண்ணீர் விட்டோம். சாரை சாரையாக நடந்து போன இந்தி மக்களுக்கு நீங்கள் காட்டிய இரக்கம் என்ன?
மக்களை ஏமாற்றும் பாஜகவின் அரசியலை வடமாநில மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. வட மாநிலங்களும் விழிப்புணர்வு பெற்று வருகின்றன. 'எங்களுக்கு படிப்பு தான் தேவை' என்று இந்தியில் பேசும் சிறுவன் ஒருவனின் காணொலி சமூக வலைதளங்களில் நான்கைந்து நாட்களாக பரவி வருகிறது.
லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற சேலம் இளைஞர் அணி மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை நீங்கள் அனைவரும் கவனித்திருப்பீர்கள். ''இந்துக்களின் உண்மையான எதிரிபா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்'' என்பது இளைஞரணியின் முக்கியமான தீர்மானம் ஆகும். இந்த பரப்புரையை அனைவரும் செய்தாக வேண்டும். பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மதத்தைக் கையில் எடுக்கிறது. நாம் இந்தியாவைக் காக்க பாஜகவை அம்பலப்படுத்துவோம். பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மதத்தைக் கையில் எடுக்கிறது. நாம் இந்தியாவைக் காக்க பாஜகவை அம்பலப்படுத்துவோம்.
இந்தியா கூட்டணியின் வெற்றியில் தான் இந்தியாவின் எதிர்காலம் அமைந்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஆட்சி என்பது உண்மையான கூட்டாட்சியாக அமையும். அத்தகைய ஆட்சியில் அனைத்து இனம் - மொழி - மத மக்களும் சம உரிமை கொண்டவர்களாக வாழ்வார்கள். வாழ வைப்போம். எல்லார்க்கும் எல்லாம் என்ற சமநிலைச் சமுதாயத்தை அமைக்க மொழிபோர் தியாகிகளின் தியாகத்தின் மீது உறுதி ஏற்போம்.
வென்று காட்டுவோம். தன்னை ஈந்து தமிழைக் காக்கும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி விடை பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?