Tamilnadu

“கோயம்பேடு பேருந்து நிறுத்தம் இனி ஆம்னி பேருந்துகள் பயன்பாட்டிற்கு கிடையாது” - அமைச்சர் சிவசங்கர் !

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 24 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். அதன்படி 90% ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களது பேருந்துகளை இயக்கி ஒத்துழைப்பு அளித்துள்ளார்கள், அவர்களுக்கு நன்றி. கலைஞர் நூற்றாண்டு நினைவுப் பேருந்து முனையத்தில் இருந்து நேற்று 440 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது; இன்று காலை 330 பேருந்துகள் வத்தடைந்தடைந்துள்ளது.

ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் சி.எம்.டி.ஏ. அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளுடன் சந்தித்தபோது அளித்த ஒப்புதல்படி அந்த இயக்கம் துவங்கியவர்களுக்கு எங்களது நன்றி. ஆம்னி பேருந்துகள் இயக்குவது முதல் நாள் என்பதால் சில சங்கடங்கள் ஏற்பட்டது. அவற்றை வருங்காலங்களில் சரி செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு நாங்கள் வைக்கும் வேண்டுகோள். போக்குவரத்துத் துறை மூலம் தேவைப்படும் கூடுதல் வசதிகள் செய்யும் பணி துவங்கியுள்ளது.

இன்று காலை வெளியூரில் இருந்துவந்த ஆம்னி பேருந்துகளில் சில ஜி.எஸ்.டி சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டுள்ளார்கள். இனி அதுபோல் இறக்கிவிட கூடாது என்று அன்பான வேண்டுகோள் வைக்கிறோம். பேருந்து நிலையத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட நடைமேடையில் வந்து இறக்கிவிட வேண்டும். அப்போததான் அந்த பயணிகளுக்கு தங்களுக்கு ஏற்ற பேருந்துகளில் பயணிக்க வசதியாக இருக்கும்.

அதே போல் பயணிகளை இறக்கிய பின் காலி பேருந்துகள் கோயம்பேடு செல்லகூடாது. தங்களது பணிமனைக்கு செல்லவேண்டும். கோயம்பேடு பேருந்து நிறுத்தம் இனி அவர்களது பயன்பாட்டிற்கு கிடையாது. கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறங்கும் பயணிகளின் வசதிக்காக 1500 பிரீபெய்டு ஆட்டோ நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பிரீபெய்டு ஆட்டோ மூலம் தங்களது சொந்த இடங்களுக்கு செல்லலாம். அதே போல் 200 கால் டாக்சி நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 300 ஓலா, ஊபர் வாகனமும் பயன்பாட்டிற்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், குறிப்பாக ஒரு சங்கத்தை சேர்ந்தவர்கள் இங்கு பார்க்கிங் வசதி இல்லை என்று தேவையில்லாமல் கூறிவருகிறார்கள். இனி இதுபோல் தேவையற்ற வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழலும் வரும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் முதல் தளத்தில் 27 புக்கிங் கவுண்டர் வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் 5000 சதுர அடி இடம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இங்கு 2000 சதுர அடி கூடுதல் படுத்தி, 7000 சதுர அடி புக்கிங் கவுண்டர் வைக்க இடம் வழங்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே ஓரிரு உரிமையாளர்கள் தேவையில்லாமல் பேட்டி கொடுப்பதை தவிர்த்துவிட்டு இங்கு வந்து பேருந்துகளை இயக்கவேண்டும்.

ஆம்னி பேருந்துகளுக்கு பார்கிங் வசதி செய்து கொடுக்கும் வேலைகளை துரிதமாக செய்துவருகிறார்கள். முடிச்சூரில் பார்க்கிங் வசதி மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும். அதுவரை இந்த பேருந்து நிலையத்தில் இடபுறம் உள்ள இடத்தை பயன்படுத்தி கொள்ளவேண்டும். இன்று அதிக அளவில் பயணிகள் வந்தமையால் அவர்கள் இங்கிருந்து மற்ற நகர் பகுதிகளுக்கு செல்ல கூடுதலாக 200 ட்ரிப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கோயம்பேட்டிற்கு 5 நிமிடத்திற்கு ஒரு முறையும், கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஓரு முறையும், தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து, மற்றும் தாம்பரம் - கிளாம்பாக்கம் (இடையில் நில்லா பேருந்து) இன்றுமுதல் இயக்கப்படுகிறது. அந்த பேருந்துகள் 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இன்று முதல் இயக்கப்படுகிறது.

பொது மக்களின் வசதிகள் குறித்து ஆய்வு செய்து ஒவ்வொரு நாளும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்த பேருந்து முனையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வர துவங்கிவிட்டது. விழுப்புரம், கும்பகோணம், சேலம் போன்ற மற்ற அரசு போக்குவரத்து கழகத்தில் இருக்கும் பேருந்துகள் 30ஆம் தேதியிலிருந்து இங்கிருந்து 80% பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும். 20% பேருந்துகள் மாதவரம் பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

சென்னையில் பல்வேறு தடங்களில் பயணிகள் கிளாம்பாக்கம் வர பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 20,000 பேர் ஆம்னி பேருந்துகளில் வந்துள்ளனர். அதில் 9.200 பேர் மாநகர பேருந்து நிறுத்தம் வரை கட்டணமில்லா பேருந்து மூலம் சென்று பயன்பெற்றுள்ளார்கள். பயணிகளின் தேவைக்கான அத்தனை வசதிகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி அறிவுறுத்தலின்படி தொடர்ந்து எடுத்துவரப்படுகிறது. பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றும்போது சற்று சிரமம் இருந்தது; பிறகு அது இல்லாமல் போனது. அதுபோல்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும், பொது மக்களுக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றிதரப்படும்” என்றார்.