Tamilnadu

“2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஹிட்லரின் தோல்வி ஸ்டாலினிடம்தான்...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை!

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அப்போது சிறப்புரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கழகத்தின் கடைசி உடன் பிறப்பு இருக்கும் வரை பாஜகவின் எண்ணம் தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது என்றார். தொடர்ந்து அவர் பேசியதாவது, “ஒட்டுமொத்த இந்தியாவும் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டை உற்றுநோக்கியது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அதிகமானோர் கலந்துகொண்டனர். சேலம் மாநாட்டை போன்றே இங்கு ஒரு மினி மாநாடு நடைபெற்று வருகிறது.

சேலம் மாநாட்டை முடித்த கையோடு தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்யும் ஒரே இயக்கம் திமுகதான். இந்தியாவிலேயே மொழிக்காக போர் தொடுத்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. முத்தமிழறிஞர் கலைஞர் அரசியலுக்கு வந்ததற்கு முக்கிய காரணம் மொழிப்போரே .

100 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பாசிஸ்டுகள் இன்றும் தமிழ்நாட்டின் மீது இந்தி மொழியை திணித்து வருகின்றன. பலவழிகளில் ஒன்றிய அரசு இந்தி மொழியை திணித்து வருகின்றது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவியின் மான்பை கூட உணராமல், தமிழ்நாடு அரசின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். ஒன்றிய நிதி அமைச்சர் கேட்ட மரியாதையை நான் தந்து விட்டேன். ஆனால் நாங்கள் கேட்ட நிதியை அவர் இன்னும் வழங்கவில்லை.

கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றிய அரசிடம் வரி பணமாக ரூ.5 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ள நிலையில், வெறும் ரூ.2 லட்சம் கோடி மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி வழங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு ரூ.7.5 லட்சம் கோடி பணத்தை கணக்கில் காட்டவில்லை என்று சிஐஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இத்தகைய ஊழல்களை எல்லாம் மறைக்கவே இராமர் கோயிலைக் கட்டி மக்களிடையே நற்பெயரை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை பாஜக செயல்படுத்தி வருகிறது. ஆனால் ஆன்மீகம் எது அரசியல் எது என்று தமிழ்நாடு மக்களுக்கு நன்றாக தெரியும்.

விரைவில் அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சிறைக்கு செல்வது உறுதி. சிறையிலும் அவர்களுக்கு அருகாமையில் இடம் கிடைப்பது உறுதி. சிறைக்கு செல்லும் பொழுதாவது அவர்கள் தவழ்ந்து தவழ்ந்து செல்லாமல் தலை நிமிர்ந்து செல்ல வேண்டும். மற்றவர்கள் காலை வாரும் கட்சிதான் அதிமுக. அதிமுகவின் தேசிய தலைமைதான் பாஜக; பாஜக-வின் தமிழ்நாட்டு பிரிவுதான் அதிமுக.

இந்தியாவில் உள்ள நூறு கல்வி நிலையங்களில் 18 கல்வி நிலையங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தது. இரு மொழி கல்வி பயின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் தற்போது சாதனைகளை படைத்து வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக 85 லட்சம் கையெழுத்துகளை மக்களிடம் நாம் வாங்கி உள்ளோம். நீட் தேர்வு ஒழியும் வரை தமிழ்நாட்டு மக்களின் போராட்டம் ஓயாது.

இந்தி திணிப்பின் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் செயலை ஒன்றிய அரசு செய்து வருகிறது. கழகத்தின் கடைசி உடன் பிறப்பு இருக்கும் வரை பாஜகவின் எண்ணம் தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது. வரும் தேர்தலின் வெற்றி 2026 ஆம் தேர்தலில் எதிரொலிக்கும். வரும் 2024ஆம் தேர்தலில் ஹிட்லரின் தோல்வி ஸ்டாலினிடம்தான் என்ற வரலாற்றை மீண்டும் ஒருமுறை நிரூபிப்போம்.” என்றார்.

Also Read: “இந்தி பேசும் மக்களுக்காவது நன்மை செய்துள்ளார்களா?...” - பாஜக ஆட்சியை புட்டு புட்டு வைத்த முதலமைச்சர் !