Tamilnadu
ராமர் கோயில் : திட்டமிட்டு போலி செய்தி பரப்பிய தினமலர் மீது நடவடிக்கை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் தற்போது இராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த இராமர் கோயில் திறப்பு விழா நாளை (22.01.2024) நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், பாஜக அரசு இந்த கோயிலை அரசியலுக்காக திறக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
இந்த சூழலில் நாளை திறக்கப்படவுள்ள இராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காததற்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அரசியல் ஆதாயத்திற்கு இராமர் கோயில் திறக்கப்படுவதாக கூறி பல்வேறு அரசியல் காட்சிகள் இதனை புறக்கணித்து வருகிறது.
இப்படியான சூழலில் இன்று 'தினமலர்' நாளிதழ் தவறான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாளை அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைக்கு பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளதாகவும், இராமர் பெயரில் அன்னதானம் வழங்கவும் அனுமதி மருத்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உண்மையா? பொய்யா? என்று கூட ஆய்வு செய்யாமல் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இவரது பதிவை தொடர்ந்து இந்த போலியான வதந்தி காட்டுத்தீ போல் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு போலியானது என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவும் கண்டனம் தெரிவித்ததோடு, இது வதந்தி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் இருக்கும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என்றும் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திட்டமிட்டு மத கலவரத்தை தூண்டும் வகையில் போலியான செய்தியை வெளியிட்ட தினமலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு பின்வருமாறு :
"உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும். அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என தினமலர் நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீயநோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தினமலர் நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு 2021-ல் பொறுப்பேற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது சுமார் 400 ஆண்டுகளுக்குப்பின், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உட்பட 1,270 திருக்கோயில்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 764 திருக்கோயில்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்று பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்திடும் வகையில் 2022-23-ஆம் நிதியாண்டில் 113 திருக்கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 ஆம் நிதியாண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய வழிபாட்டு உணர்வுகளில் ஊறியுள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த உண்மை புரியும். மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சிகள் கூட இதனை மறுக்க முடியாது.
இந்நிலையில் திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது."
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!