Tamilnadu

மழை வெள்ள மீட்புப் பணிகள் : தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஒன்றியக் குழு அதிகாரிகள்!

2023ம் ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த வெள்ள பாதிப்பால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழக்க நேரிட்டது. பிறகு உடனே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.6000 நிவாரண நிதி அறிவித்து, வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளை இழந்தவர்கள், ஆடு, மாடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண நிதியையும் அறிவித்தார்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மழைவெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி ஒன்றியக்குழு தென் மாவட்டங்களில் ஆய்வு செய்தது.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக ஒன்றியக்குழு அதிகாரிகள் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார்கள். நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று நெல்லையில் ஆய்வு செய்து வருகிறார்கள். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கருப்பந்துறை ஆற்றுப்பாலம், சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம், உடைப்பு ஏற்பட்ட சாலைகள், குளங்களை ஆய்வு செய்தனர். அதோடு அம்பாசமுத்திரம், நெல்லை பகுதியில் மழையால் சேதம் அடைந்த இடங்களையும், விவசாய நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றியக்குழு அதிகாரிகள், "தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளன.

Also Read: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: ஒரேநாளில் 2.17 லட்சம் பேர் பயணம்!