Tamilnadu

‘எனது கிராமம்’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்ன?

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை 3-வது ஆண்டாக தொடர்ந்து அயலகத் தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது. இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர் பெருமக்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அயல்நாடுகளில் வசிக்கும் 1400-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்து உள்ளனர். இதில், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள் மற்றும் 48 பிற மாநில தமிழ் சங்கங்களைச் சேர்ந்த அயலக தமிழர்கள் பங்கேற்றனர்.

முதல் நாளான நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அயலகத் தமிழர் தின விழாவைத் தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார். இதில், சிறப்பு நேர்வாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முதல் நாள் விழாவில், சிறப்பு நிகழ்ச்சிகளாக நான்கு கலந்துரையாடல்கள் மற்றும் ஒரு கவிஅரங்கமும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் ம. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் தமிழின் தொன்மை – தொடர்ச்சி குறித்து துறைசார் வல்லுநர்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். தொடர்ந்து, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் சிந்து சமவெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை – தொலைநோக்குச் சிந்தனையும் செயலும் என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றது.

மேலும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தலைமையில் ஒளிரும் எதிர்காலம் – வாய்ப்புகளும் சவால்களும் என்ற தலைப்பிலும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் தலைமையில் வணிகத்தில் தமிழர்கள் – வாய்ப்பும் வளர்ச்சியும் என்ற தலைப்பிலும் கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

இரண்டாம் நாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ‘எனது கிராமம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

Also Read: தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு : நாளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!