Tamilnadu

குற்றவாளிக்கு துணை போகும் ஆளுநர்?: துணைவேந்தர் ஜெகநாதனுடன் தனியாக ஆலோசனை நடத்திய ஆர்.என்.ரவி!

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாகப் பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகார் எழுந்தது.

அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த டிசம்பர் 26ந் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே பூட்டர் பவுண்டேஷன் செயல்பாடு மற்றும் அதில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பாக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு ஆதரவாளர்களான பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி, துணை பேராசிரியர்கள் நரேஷ் குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் நிலையம் வரவழைத்து காவல் உதவி ஆணையர் நிலவழகன் அண்மையில் விசாரணை மேற்கொண்டார்.

இந்த முறைகேடு தொடர்பாக போலிஸார் விசாரணை மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தில் சோதனையிலும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முறைகேடு வழக்கில் செய்து செய்யப்பட்டுள்ள துணை வேந்தர் ஜெகநாதன் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சேலத்திற்கு வருகை தந்துள்ளார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க மாணவர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் 15 நமிடங்கள் மட்டுமே ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நடந்துள்ளது. பிறகு துணை வேந்தர் ஜெகநாதனிடம் தனியாக ஆளுநர் ஆர்.என்.ரவி பத்து நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்து பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

Also Read: 1.50 லட்சம் ராணுவ வீரர்களுக்கு பணி ஆணை வழங்காத ஒன்றிய பாஜக அரசு : காங்கிரஸ் போராட்டம் !