Tamilnadu

”உலக தமிழர்களின் பாதுகாவலன் தி.மு.க அயலக அணி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தி.மு.க அயலக அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நமது கழகத்தின் அயலக அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கின்றது. அதுவும் கலைஞர் நூற்றாண்டு வருடத்தில் நடப்பது கூடுதல் சிறப்பு. மாநாடு போல இந்த அயலக அணி கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

உலக தமிழர் நலனுக்காக நாள்தோறும் உழைத்தவர் கலைஞர். 2021 ஆண்டு ஜனவரி மாதம் அயலக அணியை நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் அயலக அணி வெளிநாட்டுத் தமிழர்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே முதன் முதலில் இளைஞர் அணி மற்றும் அயலக அணியை உருவாக்கியது நமது கழகம்தான். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்குப் பக்கபலமாகவும், பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அயலக அணி உருவாக்கப்பட்டது.

உயிரிழந்த வெளிநாட்டுத் தமிழர்களின் உடல்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு 10 மாதங்களுக்கு மேல் ஆகும் என்றிருந்த நிலையை மாற்றியது நமது கழக அயலக அணிதான். தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை 10 நாட்களுக்குள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் வகையில் தற்போது தி.மு.க அயலக அணி ஏற்பாடு செய்திருக்கிறது.

பாசிச பா.ஜ.கவினர் பரப்பும் அவதூறுகளை எதிர்க்கத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூன்று பேரின் பேச்சும் எழுத்துகளுமே போதும். முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 9 புத்தகங்களை வாங்கி படியுங்கள்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: ”மதம் என்பது தனிப்பட்ட விஷயம்” : ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது!