Tamilnadu
6 லட்சம் கோடி முதலீடு.. 26 லட்சம் வேலைவாய்ப்புகள்.. - முதமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு!
சென்னையில் கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இம்மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 இலட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை இந்தியாவே உற்று நோக்கும் இந்த அவையில் பெரு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் என்றும், இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 26 இலட்சத்து 90 ஆயிரத்து 657 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றும் குறிப்ப்பிட்டது நம் அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் முதல்வர் அவர்கள் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பெரும் சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நம் முதல்வர் அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதையும் இந்த நேரத்தில் எண்ணி தமிழகம் பெருமை கொள்கிறது.
உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் தமிழ்நாட்டு அரசுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் மாநாட்டில் இணைந்து செயல்பட்டு இருக்கின்றன.
தலைமைத்துவம் (Leadership), நீடித்த நிலைத்தன்மை (Sustainability), அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (Inclusivity) ஆகிய கருப்பொருள்களில் இந்த மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது. 8 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்ட இந்த மாநாட்டில், 300 முதலீட்டாளர்கள், 50க்கும் மேற்பட்ட அமர்வுகளில் விவாதித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிறந்த முடிவுகளை எடுத்துள்ளார்கள்.
“தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக உயர்ந்து வரும் தமிழ்நாடுதான் உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்பதே நமது நிலையான செய்தியாக இருந்து வருகிறது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள செய்தி நம் அனைவரையும் பெருமிதம் பொங்கச் செய்கிறது.
திராவிட மாடல் அரசினை திறம்பட வழிநடத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இச்சாதனை தமிழ்நாட்டு வரலாற்றில் வைர எழுத்துக்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தொழில் வளர்ச்சியின் மூலம் பொருளாதார நிறைவு காணவும், இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தரவும், நாட்டை வலுவான பாதைக்கு அழைத்துச் செல்லவும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாடு முதல்வருக்கு என் அன்பான பாராட்டுகள், வாழ்த்துகள்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!