Tamilnadu
"தமிழ்நாட்டில் 95 % பேருந்துகள் இயங்கிக் கொண்டுள்ளது" - போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி !
இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் சில போக்குவரத்து சங்கங்களால் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 95 % பேருந்துகள் இயங்கிக் கொண்டுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்கப்பட வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்திலேயே மக்களுடைய பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. தற்பொழுது கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு அனைத்து பேருந்துகளும் இயங்கி வருகிறது பொதுமக்களும் எந்த இடையூறும் இன்றி பயணம் செய்து வருகிறார்கள்.
நான் இந்த நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிற தொழிற்சங்கங்களுக்கு வைக்கின்ற வேண்டுகோள், நீங்கள் வைத்திருக்கிற கோரிக்கையில் ஏற்கனவே இரண்டு கோரிக்கைகள் நடைமுறையில் இருக்கிறது. அரசு பணியாளர்கள் குறைவாக இருப்பதை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கருத்தை முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார். புதிதாக ஓட்டுனர், நடத்துனர்களை பணிக்கு எடுப்பதற்கும்,அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஆட்கள் எடுப்பதற்கான எழுத்து தேர்வுகள் முடிவு பெற்று வேலைக்கு நபர்கள் எடுக்கப்பட இருக்கிறார்கள்.
அதேபோல பணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்ற கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத கோரிக்கையையும் தமிழ்நாடு முதலமைச்சர் இப்பொழுது அவரது கையாலே ஆணைகளை வழங்கி துவங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற எட்டு போக்குவரத்து கழகங்களிலும் முதல் சுற்று பணியானைகள் வழங்கப்பட்டு விட்டது. இரண்டாம் சுற்றும் பணியாளர் ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டதுதான். இந்த கோரிக்கைகளை மீண்டும் சொல்வது என்பது அரசியல் காரணங்கள்தான்.
இன்னும் இரண்டு கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் போது உறுதியளித்திருக்கிறோம். முதல்வரிடமும் அனுமதி பெற்று இருக்கிறோம். ஆனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி என்பது இன்று இருக்கின்ற நிதிநிலை காரணமாக உடனடியாக வழங்க முடியாத காரணம் உள்ளது. ஏற்கனவே ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் ஐந்து சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டு, எல்லா தொழிலாளர்களும் கூடுதல் சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்டதை தமிழக முதல்வர் கடந்த ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் நிறைவேற்றிக் கொடுத்தார்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பதில் எங்களுக்கு கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வைத்துவிட்டு போன நிதி சுமை, ஆட்சி துவக்கத்திலே கொரோனா காலத்திலே இருந்த பொருளாதாரத் தேக்கம், தற்பொழுது தொடர்ந்து ஏற்பட்ட சென்னை வெள்ளம், தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ஏற்பட்ட அதிக கன மழை பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டிய தேவை, அதேபோல தொடர்ந்து மக்கள் நல பணிகளை நிறைவேற்றி வருகின்ற நிலையில் இவற்றுக்கு நேரம் தான் கேட்கிறோமே தவிர வேறு எதுவும் கேட்கவில்லை,
இதைப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த அகவிலைப்படியை நிறுத்தியது அதிமுக ஆட்சி தான்.96 காலமாக அகவிலைப்படி நிறுத்தப்பட்டது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். கலைஞர் ஆட்சி காலத்தில் 20% ஆக போனஸ் வழங்கப்பட்டதை எட்டு சதவீதமாக அதிமுக ஆட்சி காலத்தில் குறைக்கப்பட்டது. மீண்டும் அதை இருபது சதவீதமாக தமிழக முதல்வர் உயர்த்தினார்.
அரசியல் காரணத்திற்காக இந்த போராட்டத்தை நடத்துவது என்பது திசை திருப்பக் கூடிய செயல். குறிப்பாக இதற்கெல்லாம் யார் காரணமோ, அந்த எடப்பாடி பழனிசாமி அணியான அதிமுக தொழிற்சங்கத்தோடு சேர்ந்து கொண்டு போராட்டத்தை நடத்துவது மிகுந்த கவலைக்குரியது வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது .
பொங்கல் நேரத்தில் இது போன்ற போராட்டங்களை நடத்துவது பொது மக்களுக்கு இடைஞ்சலை தரும். இந்த ஆறு கோரிக்கைகளில் ஒற்றை கோரிக்கைகளுக்கு மட்டும் கால அவகாசம் கேட்கிறோம். இன்றைக்கு போக்குவரத்து சுமூகமாக இயங்குகிறது, அதற்கு இடைஞ்சல் செய்ய வேண்டாம். உங்கள் உரிமையை கேட்பதிலே எங்களுக்கு எந்த கருத்து மாறுபாடும் இல்லை. எங்கேயும் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் செய்ய வேண்டாம் என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை கேட்டுக்கொள்கிறேன். திமுக என்றைக்கும் தொழிலாளர்களுக்கு துணையாக இருக்கக்கூடிய இயக்கம். தற்போது 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பணியாளர்கள் எடுப்பதற்கு அரசாணை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது 95 சதவீதத்திற்கும் மேலான பேருந்துகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை காரணமாக தாமதமாக பேருந்துகள் புறப்பட்டிருந்தாலும் எல்லா இடங்களிலும் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து ஊழியர்கள் மக்களுடைய நலனை கருதி பணியை செய்கிறார்கள். தொழிற்சங்க சங்கங்களை நடத்துகிறவர்கள் அவர்களுடைய அமைப்பை காட்டுவதற்காக போராட்டத்தை கையெடுத்திருக்கிறார்கள். தலைவர்கள் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள், தலைமையின் கீழ் இருக்கிறவர்கள் பணியாற்றுகிறார்கள். மீண்டும் அவர்களிடம் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்" எனக் கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!