Tamilnadu

”என் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் டி.ஆர்.பி ராஜா" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும், தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024 மற்றும்1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எய்துவதற்கான செயல்திட்ட அறிக்கை ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதோடு நேற்று முதல் நாளில் மட்டுமே ரிலையன்ஸ் ஜியோ, டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டி.வி.எஸ்.குழுமம், மிட்சுபிஷி, ஏ.பி. மோலார் மெர்ஸ்க், ஹுண்டாய், JSW, அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து இன்றும் சி.பி.சி.எல். மஹேந்திரா, காவிரி, அதானி, ராம்ராஜ், ராம்கோ சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த 2 நாட்களில் மட்டும் 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

பின்னர் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசினார். அதில், "திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் எல்லோருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி - இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து - என் இதயத்தில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டார் தம்பி டி.ஆர்.பி ராஜா அவர்கள். தொழில்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலயச் சாதனையைச் செய்திருக்கும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவை பாராட்டுகிறேன். இவ்விழாவில் கண்ணும் கருத்துமாய் இருந்த தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

Also Read: 2 நாட்கள் 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் - 26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!