Tamilnadu

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.. முழு விவரம் என்ன ?

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "வட தமிழகம் கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. 5 இடங்களில் அதி கனமழை, 17 இடங்களில் மிக கனமழை, 55 இடங்களில் கனமழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக சீர்காழி 23 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழ்நாடு கடற்கரை பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் 40 - 45 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 55 கிலோமீட்டர் காற்று வீசுவதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்த வரை ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. குமரிக்கடல் ஒட்டி உள்ள தென் மாவட்டங்களில் கன மழை காண வாய்ப்பு உள்ளது.

ஜனவரி மாதத்தை பொருத்தவரை அதிகபட்சமாக புதுச்சேரியில் கன மழை பெய்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் இரண்டாவது அதிகபட்ச மழையும், கடலூரில் மூன்றாவது அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. கிழக்கு திசை காற்று வீசுவதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சுழற்சி வளிமண்டல தாழ்வு பகுதியாக மாற இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை இந்த ஆண்டு 455 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. இந்த பனிகாலத்தை பொறுத்தவரை இயல்பு மழை அளவு 5 மில்லி மீட்டர். ஆனால் பதிவான மழை 28 மில்லி மீட்டர், இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது" என்றார்.

Also Read: இவரை போல ஒருவர் கிடைத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவே இருக்காது- இந்திய வீரரை புகழ்ந்த இர்பான் பதான்!