Tamilnadu
“நான் உரையாற்ற வரவில்லை; நன்றி கூற வந்திருக்கிறேன்..” : கலைஞர் 100 விழாவில் முதலமைச்சர் நெகிழ்ச்சி உரை !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (6.01.2024) சென்னை, கிண்டி, மெட்ராஸ் ரேஸ் மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற “கலைஞர் – கலைஞர் 100” திரைத்துறையின் மாபெரும் கலை விழாவில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றின்னார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “நான் உரையாற்ற வரவில்லை. நன்றி கூற வந்திருக்கிறேன். அதுதான் முறையாக இருக்கும். அப்பா, அம்மா வைத்த பெயரை கூட அழைக்காமல், ‘கலைஞர்‘ என்று தமிழ்நாட்டு மக்கள் அன்போடு அழைத்த ஒரு மாபெரும் தலைவர் நம்முடைய கலைஞர்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நம்முடைய உள்ளங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தொண்டர்கள் கொடுத்த ‘தலைவர் ‘பட்டத்தை போலவே, நீங்கள் கொடுத்த ‘கலைஞர்‘ பட்டத்துக்கும் முழுப்பொருத்தமானவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்! தலைவர் கலைஞர் என்று தான் தமிழ்நாடே அவரை அழைக்கிறது.
சூப்பர் ஸ்டார் முதல், தென்னிந்திய கலைஞர்கள் வரை இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டார்களை உருவாக்கும் கடைநிலைத் திரைக்கலைஞர்கள் வரை தலைவர் கலைஞருக்காக திரையுலகமே திரண்டு வந்திருக்கிறீர்கள்!
இங்கு கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்ந்த காலத்தை போலவே, நிறைந்த பிறகும் நித்தமும் நினைக்கக் கூடியவராக தலைவர் கலைஞர் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள்! தலைவர் கலைஞர் மறைந்த பிறகு தமிழ்நாடே கலங்கி நின்றது! எல்லாத் தரப்பினரும் கண்ணீரால் அஞ்சலி செலுத்தினார்கள். ஏற்கனவே, கோவையிலும் – சென்னையிலும் கலையுலகத்தினர் சார்பில் புகழஞ்சலிக் கூட்டங்கள் எல்லாம் நடந்தது.
எல்லாத் தரப்பு மக்களும், தொழிலதிபர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் இப்படி எல்லாத் தரப்பு மக்களும் தலைவர் மறைந்த நேரத்திலே அவருக்கு புகழஞ்சலி செலுத்தியது ஒரு மிகப் பெரிய வரலாறு. அதற்கெல்லாம் மகுடம் சூட்டுவதுபோல, அவருடைய நூற்றாண்டு விழாவை இன்றைக்கு சீரும் சிறப்புமாக கலைத்துறை சார்ந்தவர்கள் கொண்டாடி இருக்கிறீர்கள்.
இதற்குக் காரணமான எல்லோருக்கும், அனைத்து அமைப்புகளுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையிலும் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற அந்த முறையிலும் மட்டுமல்ல, தலைவர் கலைஞர் அவர்களின் மகன் என்ற அந்த முறையிலும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக, 50 ஆண்டுகள்! 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்! எந்த பொறுப்பை வகித்தாலும், தன்னுடைய படைப்புத் திறனை வெளிப்படுத்துவதில் அவர் குறை வைத்ததே கிடையாது. தன்னுடைய எழுத்தாற்றலாலும், பன்முகப்பட்ட படைப்பாற்றலாலும், ரசிகர்களின் உள்ளங்களில் குடியேறியவர் நம்முடைய தலைவர் கலைஞர்!
"வசனம் மு. கருணாநிதி" என்று இருந்தாலே படம் வெற்றியடையும். சினிமாவில் சான்ஸ் வாங்க கலைஞரின் வசனத்தை பேசி ஒப்புவிப்பது வழக்கம் ஆனது. அவரின் வசனப் புத்தகங்கள் அதிகமாக அச்சடிக்கப்பட்டு விற்பனை ஆனது. 1947-இல் முதல் படம் ராஜகுமாரி, 2011-இல் கடைசிப்படம் பொன்ன - சங்கர். 65 ஆண்டுகளாக கலைத்துறையில் பயணம் செய்து "கலையினம் என்பது என் இனம்" என்று உங்களில் ஒருவராக இருந்த உங்களின் கலைஞருக்குத்தான் விழா எடுத்திருக்கிறீர்கள்.
அதனால்தான் கழகம் ஆட்சி அமையும்போதெல்லாம் கலைஞரும், திரைத்துறையினருக்கு ஏராளமான நலத் திட்டங்களை, சாதனைகளை படைத்திருக்கிறார். அந்த வழியில்தான், இப்போதைய கழக அரசும் திரைத்துறையினருக்குப் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.
எங்கள் குடும்பமே, கலைத் துறையைச் சார்ந்த குடும்பம் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். அந்த வகையில், நானும் உங்கள் கலைத்துறையைச் சார்ந்தவன்தான். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு உதயநிதி அவர்களும் சில மாதங்களுக்கு முன்பு வரை திரையுலகத்தில் கால்பதித்து நின்றவர்தான்.
எனவே, இந்த அமைச்சரவையும், கலைத் துறையினருக்கு நெருக்கமான அமைச்சரவைதான். உங்கள் கோரிக்கைகளை எப்போதும் செயல்படுத்தித் தரத் தயாராக இருக்கிறோம். அந்த அடிப்படையில் சில அறிவிப்புகளை, இந்த மேடையில் நான் வெளியிட விரும்புகிறேன்.
என்னுடைய தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு படப்பிடிப்புத் தளங்களாக விரைவில் அமைக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்ல, திரையுலகம் சார்பில், கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நேராக வந்து என்னிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, நவீன திரைப்பட நகரம் (Modern Film City) பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில், 500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட இருக்கிறது.
அந்தத் திரைப்பட நகரத்தில் பெரிய L.E.D. Wall, நவீன தொழில்நுட்ப அம்சங்களான அனிமேஷன் மற்றும் VFX, Production மற்றும் Post Production பணிகள், 5 நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை வெகுசிறப்பாக நடத்திக்காட்டிய திரைத் துறையினருக்கு நான் மீண்டும் நன்றி சொல்கிறேன். நான் கொஞ்சம் காலம் கடந்து வந்தேன். அதுமட்டுமல்லாமல், விரைவாகவும் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். காரணம், நாளையும், நாளை மறுநாளும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கான பணி காத்திருக்கிறது. அதனால்தான், வேக வேகமாக என்னுடைய உரையை நான் இங்கே ஆற்றி விடைபெற விரும்புகிறேன்.
இங்கே உரையாற்றிய நம்முடைய அருமை கலைத்துறை நண்பர்கள் எல்லோருக்கும் பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், தொழிலாளர் சங்கத்தினருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றி, நன்றி, நன்றி, நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!