Tamilnadu

”எந்த சக்தியாலும் தமிழ் மொழியை அழிக்க முடியாது” : தொல். திருமாவளவன் பேச்சு!

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் இணைந்து சென்னை சைதாப்பேட்டையில் உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டை நடத்தினர்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

இந்த மாநாட்டில் பேசிய தொல்.திருமாவளவன், "பிறமொழிகளைக் கற்றுக் கொண்டால் வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். இந்த கருத்தோட்டம் தற்போது அதிகமாகி வருகிறது. இதனால் ஆங்கிலத்தை அதிகம் கற்கும் நிலை உள்ளது.

இன்னும் 50 ஆண்டுகள் கடந்தால் தமிழ் மொழி வீடுகளில் மட்டுமே பேசக்கூடிய மொழியாக மாறிவிடும் என அறிஞர்கள் அச்சம் கொள்கிறார்கள். ஒரு காலத்தில் கோலோச்சிய ஆட்சி மொழியாகச் சமஸ்கிருதம் இருந்தது. ஆனால் இன்று வெகு சிலர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

உலகிலேயே தமிழ் தான் பழைமையான மொழி. தமிழ் மொழிக்கு என்று தனி அடையாளம் உண்டு. தமிழ் மொழியை தழுவித்தான் பல மொழிகள் உருவாகியுள்ளது. தமிழ் மீது எத்தனையோ படையெடுப்புகள் வந்தாலும் அதனை எல்லாம் தாண்டி இன்றும் தமிழ் நிலைத்து நிற்கிறது. தமிழை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "மதங்களைக் கடந்து அனைத்து மதம் சார்ந்தவர்களையும் நேசிக்கின்ற மொழியாளர்கள் என்றால் உலகிலேயே அது தமிழ் மொழியாளர்கள் தான். உலகத்தில் பல்வேறு மொழிகள் இருக்கலாம். சென்னையில் ஒரு தமிழருக்கு ஒரு பிரச்சனை என்றால் அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழர் துடிக்கிறார். அது தான் தமிழ்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் எக்கு கோட்டை தமிழ்நாடு” : கே.எஸ்.அழகிரி புகழாரம்!