Tamilnadu
”தமிழ்நாட்டிற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை” : நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!
தமிழ்நாடு அரசிடம் இருந்து பெறப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திரும்ப வழங்குகிறது. தமிழ்நாடு அரசுக்கு எந்தவிதமான உதவியையும் ஒன்றிய அரசு வழங்காதது வருத்தம் அளிக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் கொரோனாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது. இருப்பினும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறது தி.மு.க அரசு.
சமீபத்தில் தமிழ்நாட்டைப் பாதித்த இரண்டு பேரிடரில் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கிப்பட்டது. கடுமையான நிதி நெருக்கடி சுமை இருக்கும் போதுகூட பொங்கல் பரிசாக ரூ.1000 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இந்த சுமைகளிலிருந்து மாநில அரசை மீட்க எந்த உதவியும் செய்ய வில்லை.
நேற்று சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய வரி வருவாய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 2014 முதல் 2023 வரை ரூ. 4.75 லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. இதில் 2.46 லட்சம் கோடி வரி பகிர்வு, மற்றும் 2.28 லட்சம் கோடி மானியம் மற்றும் உதவித் தொகையாக உள்ளது.
ஆனால் நேரடி வரி வருவாயாகத் தமிழ்நாட்டில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி தமிழ்நாட்டிலிருந்து ஒன்றிய அரசு பெற்றுள்ளது. ஆனால், நம்மிடத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு பெரும் ஒவ்வொரு ரூபாயிற்கும் அவர்கள் திருப்பி கொடுப்பது 29 பைசாதான். இது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வேறுபடுகிறது.
உதாரணமாக உத்தரபிர தேசத்திலிருந்து ரூ.2.23 லட்சம் கோடி ஒன்றிய அரசு பெறும் நிலையில், அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கும் நிதி 15.35 லட்சம் கோடியாக உள்ளது. 12வது நிதிக்குழு காலகட்டத்தில் ஒன்றிய நிதித்துறை மூலம் தமிழகத்திற்குக் கிடைத்த பகிர்வு 5.3% ஆக இருந்த நிலையில் 15வது நிதிக்குழுவின் போது 4.079% ஆகக் குறைந்துள்ளது.
செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலம் ஒன்றிய அரசு கூடுதல் நிதியை மாநில அரசிடம் பெறுகிறது. 2011-12 காலகட்டத்தில் 10.4% இருந்த நிதி 2021-2022 காலகட்டத்தில் 28.1% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் மாநில அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது.
ஜி.எஸ்.டி மூலம் ஒவ்வொரு ஆண்டும் 14% வருவாய் வளர்ச்சி இருக்கும் என ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தும் போது ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால் புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் அது போன்ற வளர்ச்சி இல்லை. நிதி ஆளுமையை நாம் இழந்துள்ளோம். 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 6.142% மக்கள் தொகை இருக்கும் தமிழ்நாட்டில், ஒன்றிய அரசு நிதி வழங்குவது 4.07% ஆக இருக்கிறது. இது பற்றாக்குறையைக் காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!