Tamilnadu
சென்னையில் Adidas நிறுவனம் : முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக மாறிவிட்ட தமிழ்நாடு- அசத்தும் தி.மு.க அரசு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2030க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஜனவரி 7, 8 ஆகிய 2 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான விரிவான திட்ட அறிக்கையும் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற அடிடாஸ் நிறுவனம் தனது உலகளாவிய திறன் மேம்பாட்டு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், ஆடை, காலணி உள்ளிட்டவற்றை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் பவேரியாவில் உள்ளது. இந்நிலையில், அடிடாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது நிறுவனத்தின் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க உள்ளதாகவும், சீனாவுக்கு வெளியே ஆசியாவில் அமையும் முதல் மையம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமையும் இந்த மையத்தின் தலைமை செயல் அதிகாரியாக அனில் கபூர் நியமிக்கப்படுவதாகவும் அடிடாஸ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்ச்சுகல், சீனா, கொலம்பியா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் உள்ள தனது உற்பத்தி, கொள்முதல், விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகளை சென்னையில் அமைய உள்ள உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம் கையாளும் என்றும் அடிடாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சிறப்பான மனிதவளம், மென்பொருள் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பல பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதன் அடையாளமாகவே அடிடாஸ் நிறுவனத்தின் அறிவிப்பு கருதப்படுகிறது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !