Tamilnadu

”இது கவிதை புத்தகம் அல்ல கால புத்தகம்” : மகா கவிதை நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் புகழாரம்!

கவிப்பேரரசு வைரமுத்துவின் புதிய படைப்பான ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் காமராசர் அரங்கில் நடைபெற்று வருகிறது. ‘மகா கவிதை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் கலைஞானி கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை வழங்கினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் கவிஞனும் அல்ல, கவிதை விமர்சகரும் அல்ல. கவிஞனாய், கவிதை விமர்சகராகவும் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், கவிப்பேரரசு வைரமுத்துவை உச்சி முகர்ந்திருப்பார். வைரமுத்து அவர்களுக்குக் கவிப்பேரரசு என்று பட்டம் வழங்கியவர் கலைஞர்தான்.

முத்தமிழறிஞர் கலைஞரின் வரலாற்றைக் கவிதைத் தொகுப்பாக நீங்கள் எழுத வேண்டும். ஒரு ரசிகனாக எனது வேண்டுகோள். இது வேண்டுகோள் மட்டும் அல்ல கட்டளை. நவீன அறிவியல் சொல்லும் திறன் தமிழுக்கு உள்ளது என்று நிரூபிக்கும் வகையில், மகா கவிதை நூல் திகழ்கிறது. இந்த புத்தகம் தமிழனைப் பற்றி மட்டுமல்ல, உலகைப் பற்றிப் பேசுகிறது. இது கவிதைப் புத்தகம் அல்ல, கால புத்தகம். இப்புத்தகம் உலகத்தைப் பேசுகிறது. உலகத்திற்குத் தேவையானதைப் பேசுகிறது. எனவே இந்நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் மரக்கன்று நடும் திட்டம், மீண்டும் மஞ்சப்பை திட்டம், காலநிலை மாற்றம் திட்டம் அறிவிக்கப்பட்டு, ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்த அளவிற்குக் காலநிலை மாற்றத்திற்குக் கவனம் செலுத்தியதில்லை." என தெரிவித்துள்ளார்.

Also Read: வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலின் தலைப்பில் மறைந்திருக்கும் 5 உள்ளடக்கம் இதுதான் : அது என்ன?