Tamilnadu
தனது வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து மகா சபாவினர்... கைது செய்த போலிஸ்... விசாரணையில் ஷாக்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த செந்தில். அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச்செயலாளராக இருக்கும் இவர், அயோத்தி இராமர் கோயில் கட்டுமானப் பணி உறுப்பினராகவும், பசு பாதுகாப்பு பிரிவின் மாநில அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 23.12.2023- அன்று நள்ளிரவு நேரத்தில் இவரது வீட்டில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசிலும் செந்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனே தடயவியல், கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இதுகுறித்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அப்போது அக்கம்பக்கத்தில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், செந்திலின் சகோதரர் ராஜீவ் காந்தியையும் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது அவர் வருவதாக கூறிவிட்டு, மறுநாள் அவரது ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், உடனே செந்திலின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் கடந்த சில நாட்களாகவும், பெட்ரோல் வீச்சு சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பும் சென்னையை சேர்ந்த மாதவன் என்பவருடன் பேசியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாதவனிடம் போலீசார் நடத்திய கிடக்குப்பிடி விசாரணையில், தனது வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீச சொன்னதே செந்தில், அவரது மகன் மணிகண்டன், மற்றும் அவர் தம்பி ராஜீவ் காந்தி என்று தெரியவந்தது. இதையடுத்து தேனி மாவட்டத்தின் கம்பம் பகுதியில் தலைமறைவாக இருந்த அவர்கள் 3 பேரையும் தேடி வந்த போலீசார், செந்தில் மற்றும் மணிகண்டனை கைது செய்தனர்.
அப்போது விசாரிக்கையில், அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச்செயலாளராக இருக்கும் செந்தில், கெத்தாக இருக்க வேண்டும் என்பதால், மகன் மணிகண்டன், சித்தப்பா ராஜீவ் காந்தியின் உதவியை நாடியுள்ளார். அப்போது இது போல் பெட்ரோல் குண்டு வீசினால், போலீஸ் நமது வீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்றும், அது நமக்கு கெத்தாக இருக்கும் என்றும், மோடி, அண்ணாமலை போன்றவர்களுக்கும் நம்மை பற்றி தெரியவரும் என்றும் ராஜீவ் காந்தி யோசனை கொடுத்துள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டை வந்த மாதவன், மது குடித்துவிட்டு, அந்த காலி பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பெரி செந்தில் வீட்டில் வீசியது தெரியவந்தது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாதவன் உட்பட 3 பேரை குற்றவியல் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தலைமறைவாக இருக்கும் ராஜீவ் காந்தியையும் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு தன் காரின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக இதே செந்தில் புகார் அளித்தார். தொடர்ந்து 2018-ம் ஆண்டு இதே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில் இப்படி ஒரு சம்பவத்தில் சிக்கியிருக்கும் செந்தில், முன்பாக கொடுத்த புகாரும் பொய்யாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!