Tamilnadu
கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம்: பேருந்து இயக்கம் குறித்து அமைச்சர் கூறியது என்ன ?
சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) மற்றும் தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகப் (TNSTC) பேருந்துகளுக்கு 8 தொகுதிகளைக் கொண்ட 215 பேருந்து பாந்துகளும் (Bus Bays), இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இரண்டடுக்கு அடித்தள நிறுத்துமிட வசதியும் உள்ளன. சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் வரை மாநகரப் பேருந்துக் கழகப் (MTC) பேருந்துகளை இயக்குவதற்கென 7 ஏக்கர் பரப்பளவில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன், மாநகரப் பேருந்துக் கழக முனையம், ஜி.எஸ்.டி. சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துக் கழக முனையத்திலிருந்து (MTC) பிரதான முனையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு, இயங்குபடிகள் மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தென் மாவட்டங்களுக்கு இயங்கக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் என்றும், பெங்களூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயங்கக்கூடிய பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் என தெரிவித்தார்.
மேலும், தென்தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்திலேயே, நின்றுவிடும் என கூறிய அவர், மற்ற பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே செல்லும் அவை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லாது எனவும், நாளை முதல் அனைத்து விரைவு பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும் என அறிவித்தார்.
அதேபோல், வார நாட்களில் 300 புறப்பாடுகளும் வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகளும் இங்கிருந்து இயக்கப்படுவதோடு, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கக்கூடிய பேருந்துகள் நாளை முதல் சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்றும், ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இயக்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை தாண்டி கூடுதலாகவும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதன் படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு பகுதிக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், தாம்பரம் பகுதிக்கு இரண்டு நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கிண்டி பகுதிக்கு மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இயக்கப்படும் என்றும், 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவை 4074 நடையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் அல்லாத விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு போக்குவரத்து கழகப் பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வந்து வழித்தடத்தில் இயங்கும் என தெரிவித்த அவர், இந்த நிலை பொங்கல் பண்டிகை வரை நீடிக்கும் என்றும், பொங்கலுக்கு பிறகு அந்தப் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் எனவும், 1040 புறப்பாடுகளும் கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து இயக்கப்படும் என்றும் கூறினார்.
ஆம்னி பேருந்துகளை பொருத்தவரை கோயம்பேட்டில் இருந்து ஏற்கனவே முன்பதிவுகள் நடைபெற்று இருப்பதால் பொங்கல் வரை மட்டுமே அவை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என்றும், பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக இயக்கப்படும் எனவும், ஜனவரி ஒன்றாம் தேதி முதலே கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் முன்பதிவு செய்யப்படும் அவர் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!