Tamilnadu

இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையம் : இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.12.2023) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிகப் பெரிய பேருந்து முனையமான “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” திறந்து வைத்தார். மேலும், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) மற்றும் தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகப் (TNSTC) பேருந்துகளுக்கு 8 தொகுதிகளைக் கொண்ட 215 பேருந்து பாந்துகளும் (Bus Bays), இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இரண்டடுக்கு அடித்தள நிறுத்துமிட வசதியும் உள்ளன. சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் வரை மாநகரப் பேருந்துக் கழகப் (MTC) பேருந்துகளை இயக்குவதற்கென 7 ஏக்கர் பரப்பளவில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன், மாநகரப் பேருந்துக் கழக முனையம், ஜி.எஸ்.டி. சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துக் கழக முனையத்திலிருந்து (MTC) பிரதான முனையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு, இயங்குபடிகள் மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து முனையத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் முனையக் கட்டடத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தளவு உயரம் கொண்ட பயணச்சீட்டு பெறுமிடங்கள், தொடு உணர் தரைப்பகுதி, மின்கலன் மூலம் இயக்கப்படும் கார்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் தனி கழிவறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டிட அறைகள், தரை தளத்தில் 53 கடைகள் மற்றும் 2 உணவகங்கள் / துரித உணவு மையம் மற்றும் முதல் தளத்தில் 47 கடைகள் மற்றும் 2 உணவகங்கள் / துரித உணவு மையம், ஏடிஎம் வசதி, தனி மருத்துவமனை மற்றும் இலவச மருத்துவ மையம், போக்குவரத்து அலுவலகம், நேரக் குறிப்பாளர் அலுவலகம், ஆண்கள், பெண்கள், மற்றும் திருநங்கைகளுக்கான கழிவறைகள், குடிநீர் வசதி, மின்விசிறிகள், இருக்கைகள், சூழல் வரைபடங்கள் வசதியுடன் பேருந்து நிறுத்துமிட அமைப்பு போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இம்முனையத்தில் பயணிகளுக்காக 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்களுக்கான படுக்கை வசதி கொண்ட ஓய்வறைகள் (Dormitory) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 2 நகரும் படிக்கட்டுக்கள் (Escalators), பயணிகளுக்கான 8 மின்தூக்கிகள் (Lifts) மற்றும் 2 சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கான மின்தூக்கிகள் (Service Lifts) அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு அடித்தளங்களில் 2,769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகு ரக வாகன நிறுத்தும் வசதிகள், நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் தீயணைப்பு, அடித்தள காற்றோட்டம், முக அடையாளம் காட்டும் கேமராக்கள் (Face Recognition Camera) போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்புமுறை (Integrated Building Management System) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

11 KV/433 V மின்மாற்றும் திறன் கொண்ட 2000 KVA மின் மாற்றிகள் மற்றும் மின் ஆக்கிகளுடன் (Generator) கூடிய துணை மின் நிலையம் மற்றும் இதர மின் கட்டமைப்பு வசதிகள், 9 கழிவறை தொகுதிகளை (Toilet Blocks) தூய்மையாக்கவும், செடிகளுக்கு நீர் பாய்ச்சவும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் நாளொன்றுக்கு 650 கி.லி. கொள்ளளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து முனையமானது 5 தரை சுத்தம் செய்யும் இயந்திரங்கள், ஒரு இயந்திர துடைப்பான் மூலம் நாள்தோறும் சுத்தமாக பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பேருந்து முனைய கட்டுமானப் பணிகள் அல்லாமல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகள் வெளியேறுவதற்காக பிரத்யேக சாலை விரிவாக்க வசதி மற்றும் பேருந்து முனையத்தின் முன்புறம் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பேருந்து முனையத்தில் பயணிகளின் குடிநீர் வசதிக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் நாளொன்றுக்கு 0.5 மில்லியன் லிட்டருடன் கூடுதலாக நிலத்தடி நீரை சுத்திகரிக்கும், 300 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள எதிர் சவ்வூடுபரவல் (RO) முறையிலான நீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) / தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் (MTC) செயல்பாட்டிற்காக தனியாக பேருந்து பராமரிப்புப் பணிமனை/பராமரிப்பிடங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், மூத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டிற்காக 5 மின்கல ஊர்தி (Battery Operated Vehicles) வசதி செய்யப்பட்டுள்ளது.

முனையத்தின் முகப்பில் 6 ஏக்கர் பரப்பளவில் நீரூற்றுகளுடைய நடைபாதைகள் கொண்ட பூங்கா, பயணிகளின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக இலவச மையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் முனையத்தின் முகப்பில் ஆட்டோ / டாக்ஸி நிறுத்தத்திற்கு தனியாக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்திற்காக புதிதாக பிரத்யேகமான ஒரு புதிய புறநகர் இரயில் நிலையம் அமைக்கவும், இதிலிருந்து பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதை (Skywalk) வாயிலாக இணைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், புறநகர் பேருந்து முனையம், இந்திய தொல்லியல் துறை (ASI) நிலங்களுக்கு அருகாமையில் அமைந்திருப்பதால், 16 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் அறிவுசார் மையம் மற்றும் காலநிலைப் பூங்கா (Archaeological Interpretation Centre & Climate Park), நடைபாதை, விளையாட்டு மைதானம், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பேருந்து முனையத்தில் புதியதாக காவல் நிலையம், இந்த முனையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சென்னை வெளிவட்டச் சாலை முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து கட்டமைப்புவசதிகளுடன் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் (Idle Parking) அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” திறந்து வைத்து, பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இப்பேருந்து முனையத்தில் ஆவின் பாலகம் அமைப்பதற்கான அனுமதி ஆணையினை மாற்றுத்திறனாளி பயனாளி ஒருவருக்கு வழங்கி, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் சிறப்பினை விளக்கிடும் காணொலிக் காட்சியினை பார்வையிட்டார்.

Also Read: “மழை வெள்ளத்திலும் மட்டமான அரசியல் செய்யும் பாஜக”: விவாத நிகழ்ச்சியில் மோடி அரசை வெளுத்து வாங்கிய கனகராஜ்