Tamilnadu

“மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு” : ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள் !

இந்தியாவில் சில இடங்களில் மதம்சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது உருவாகி வருகிறது. இதனை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து அல்லது குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த அமைப்பினர் ஒன்றாக சேர்ந்து மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தாமாகவே ஈடுபட்டு வருவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மதநல்லிணக்க நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.

இந்து திருவிழாவுக்கு முஸ்லிம்கள் பேனர் அடிப்பது இந்து கோயில் நிர்வாக கமிட்டியில் முஸ்லிம்கள் பொறுப்பில் இருப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும் முக்கிய பண்டிகைகளின் போது மதங்களை கடந்து அனைவரும் இணைந்து உணவு பகிர்ந்து உண்ணும் நிகழ்வுகளும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் இன்று வரை நடந்து வருகின்றன. அந்த வகையில் கிருஷ்ணகிரி நகரில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். தற்போது ஒன்பதாம் ஆண்டாக கிருஷ்ணகிரி நகர இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் அஸ்லாம் தலைமையில் கிருஷ்ணகிரி அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடந்த சிறப்பு பஜனை வழிபாட்டின்போது பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் மாலை அணிந்து பஜனையில் பங்கேற்ற ஐயப்பன் பக்தர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தையும் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Also Read: இஸ்லாமிய மாணவரை சக மாணவர்களை வைத்து தாக்கிய ஆசிரியர்: உ.பி அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !