Tamilnadu

சேலம் பெரியார் பல்கலை. முறைகேடு : அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு ? போலிஸார் அதிர்ச்சி தகவல் !

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் ஜெகநாதனின் பதவிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் ஊழல் குற்றச்சாட்டுகள் என தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வந்தது.

இந்த சூழலில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிற் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் என்பவர் அரசு அனுமதி பெற்று சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதிரடியாகச் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலிருந்த துணை வேந்தர் ஜெகநாதனை கடந்த டிச.26ம் தேதி போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதோடு இந்த வழக்கில் தொடர்புடைய பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு மற்றும் கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழக முறைகேட்டில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு தொடர்பா என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், அதிமுக முன்னாள் அமைச்சருக்கு, பல்கலைக்கழக துணை வேந்தர் மிகவும் நெருக்கமான உறவினர் என்பதால் இந்த முறைகேட்டில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறியுள்ளனர்.

மருத்துவ காரணங்களை கூறி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனையும் அந்த அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. மேலும், போலீசாரின் விசாரணையில் முழு ஆதாரங்கள் கிடைத்த பின்னர் அமைச்சரின் விவரங்கள் குறித்து அறிவிக்கப்படும் என போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read: "தற்காலிக மல்யுத்த கூட்டமைப்பு குழுவை ஏற்க முடியாது": பிரிஜ் பூஷன் உதவியாளர் அறிவிப்பு- முழு விவரம் என்ன?