Tamilnadu
“வீரர்களுக்கு இது ஒரு தடையாக இருக்கக் கூடாது” - KHELO இந்தியா விளையாட்டு துவக்க விழாவில் அமைச்சர் உதயநிதி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் முன்னிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-இன் இலச்சினை, சின்னம், சுடர் மற்றும் ஜெர்சி ஆகியவை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 2024-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடத்தப்பட உள்ளது.
18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ல், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், இந்த போட்டியில் 27 வகையான விளையாட்டுகளுடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இடம் பெற உள்ளது. நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் போட்டிக்கான திருவள்ளுவர் இலச்சினையை நேற்று வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் போட்டியின் சின்னமாக வீர மங்கை - வேலு நாச்சியாரின் உருவத்தை வெளியிட்டார். 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான “தமிழ்” என்று பெயரிடப்பட்டுள்ள சுடர் மற்றும் பாடலையும் வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, பேட்மிண்டன் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஹாக்கி ஆசியக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ்.மாரீஸ்வரன் உள்ளிட்ட புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை பின்வருமாறு : "கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தமிழகத்தில் முதல் முறையாக நடத்துகின்றோம். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. 2023 ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த ஒன்றிய அரசிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி. தமிழகத்தின் முகமாக ஜவஹர்லால் நேரு மைதானமும், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமும் உள்ளது.
தமிழகம் சிறந்த விளையாட்டு வீரர்களை கொண்டுள்ளது. அடுத்த தலைமுறை வீரர்களுக்கு இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் புது உத்வேகத்தை அளிக்கும். இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டின் மீது ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் இன்று விளையாட்டின் மீதான விழிப்புணர்வு உயர்ந்துள்ளது. அதன் காரணமாகவே உலகின் எந்த மூலையில் விளையாட்டு போட்டிகள் நடந்தாலும் நம் நாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்கின்றனர். குறிப்பாக தமிழக வீரர்களின் பங்களிப்பு அதிகரித்து உள்ளது. அத்தலட்டிக், ஸ்குவாஷ், கபாடி, செஸ் என எல்லா போட்டிகளிலும் தமிழ்நாட்டு வீரர்கள் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.
விளையாட்டு போட்டிகளில் சாதிப்பவர்களுக்கு புதிய புதிய களங்களை அமைத்து கொடுப்பதிலும், திறமைவாய்ந்த வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் உறுதி பூண்டதோடு, அதற்கான பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் மாமல்லபுரத்தில் நடந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி.
பல ஆண்டுகளாக நடத்த வேண்டிய போட்டிகளை எல்லாம் ஒரே ஆண்டில் நடத்தி காட்டியுள்ளோம். முதலமைச்சர் கோப்பை என்ற பெயரில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்டந்தோறும் நடத்தி திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளோம். பொருளாதர நெருக்கடிகள் விளையாட்டு வீரர்களின் திறமைகளை முடக்கி விட கூடாது என்பதில் கவனமாக உள்ள நம் முதலமைச்சர் பல்வேறு முயற்சிகள் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் ஏராளமான வீரர்களுக்கு உதவி வருகிறோம். சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு முதல் பங்களிப்பாக தமிழக முதலமைச்சர் ரூ.5 லட்சம் தனது சொந்த நிதியில் வழங்கி துவங்கி வைத்தார். ரூ.22 கோடி அரசின் இதர பிரிவுகள் மூலம் சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு கிடைத்துள்ளது.
கடந்த 7 மாதத்தில் மட்டும் ரூ.6 கோடி இந்த அறக்கட்டளை நிதியிலிருந்து வீரர்களுக்கு பல்வேறு போட்டிகளில் பங்கு பெறுவதற்கான பங்களிப்பாக பயன்படுள்ளது. சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் உதவி பெற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் 13 பேர் வெவ்வேறு பிரிவு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளனர்.
சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடர்ந்து தமிழக வீரர்களுக்கு துணை நிற்கும். அவர்களது வெற்றிகளை சாத்தியப்படுத்த எல்லா வகையிலும் தமிழக அரசு உதவிடும். உலகின் எந்த மூலையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றாலும் வெற்றி கோப்பையுடன் தமிழக வீரர்கள் திரும்புகின்றனர். சீனாவில் நடைபெற்ற 19வது ஆசிய போட்டிகளில் 28 பதக்கங்களை நம் தமிழக வீரர்கள் வென்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ரு.9 கோடியே 40 லட்சத்தை நம் முதல்வர் வழங்கினார்.
மேலும் தேசிய மகளிர் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற நம் வீரங்கனைகளுக்கு ரு.60 லட்சமும், உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி வென்ற செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு ரூ.30 லட்சமும் ஊக்கத் தொகையாக நம் முதல்வர் வழங்கினார். அதோடு மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் நம் அரசு துணை நின்று வருகிறது.
சமீபத்தில் நடந்த கேலோ இந்தியா பாரா இளைஞர்கள் போட்டியில் நம் வீரர்கள் பல்வேறு போட்டிகளில் 20 தங்க பதக்கங்களையும், 8 வெள்ளி, 14 வெண்கல பதக்கங்களையும் வென்று நாட்டிலேயே மூன்றாவது இடத்தை தமிழக அரசு பெற்றது என மகிழ்ச்சி. ஜெர்மனி மற்றும் சீனாவில் நடந்த மாற்றுத்திறனாளிகாளுக்கான தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று தமிழக வீரர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழகத்தில் விளையாட்டுத்துறை உள் கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மணிப்பூரில் சோதனையான நேரத்தில், மணிப்பூர் ஃபென்சிங் வீரர்களை நம்முடைய மாநிலத்திற்கு வரவேற்றோம். அவர்களின் பயண செலவு மற்றும் தங்குமிட செலவுகளைச் செலுத்தி, சென்னையில் அவர்களுக்கு பயிற்சி அளித்தோம்.
விளையாட்டு வீரர்களுக்கு மாநிலங்களுக்கிடையே பயிற்சி அளிக்க ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். ஒன்றிய அரசு, கேலோ இந்தியா விளையாட்டுகளை சில பிராந்திய சுவைகளுடன் நடத்த வேண்டும். உதாரணமாக, பெயரைப் பிராந்திய மொழியில் பயன்படுத்தலாம். ஏனென்றால், தமிழ்நாட்டில் நடத்தும் இந்தப் போட்டியை கேலோ இந்தியா யூத் கேம்ஸ் என்று சொல்லும் போது, சிலருக்கு புரியவில்லை.
வெளி மாநிலங்களில் கேலோ இந்தியா போட்டிகளை நடத்தும் போது, அந்த மாநில மொழிகளில், அதற்கான பெயரை இட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் திறமைகளின் சங்கமம் மட்டுமல்ல, மனித மனப்பான்மை, திறன்வளர்ச்சி மற்றும் சிறப்பைத் தொடர்வது ஆகியவற்றின் கொண்டாட்டம்.
தமிழ்நாட்டின் வளமான விளையாட்டு வரலாற்றின் பின்னணியில், விளையாட்டு மைதானங்களில் திறமைகள் மற்றும் கனவுகளின் வெளிப்பாட்டைக் காண இன்று நாம் ஒன்று கூடியுள்ளோம். இந்த போட்டியில் நமது விளையாட்டு வீரர்கள் போட்டியிடும் அரங்குகள் வெறும் களங்கள் மட்டுமல்ல, அவை வாழ்க்கைப் பாடங்களின் வகுப்பறைகள்.
இந்த விளையாட்டுகளில் பங்கேற்கும் இளம் விளையாட்டு வீரர்கள் போட்டியாளர்கள் மட்டுமல்ல, கனவுகள் மற்றும் அபிலாஷைகளின் தூதர்கள். உங்கள் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விளையாட்டுத் திறன் எங்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. களத்தில் ஒவ்வொரு கணத்தையும் மதிக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், விளையாட்டின் எல்லைகளைத் தாண்டி நட்பை உருவாக்கவும்.
இறுதியாக, நமது இளைஞர்களின் விளையாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் நாம் உறுதிமொழி எடுப்போம். இந்த விளையாட்டுகள் வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமாக செயல்படட்டும் மற்றும் ஒவ்வொரு இளம் விளையாட்டு வீரரின் இதயங்களிலும் விளையாட்டுத் திறனின் சுடர் எரியட்டும். 2023-ம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நாம் தமிழ்நாட்டில் தொடங்கும்போது, விளையாட்டு உணர்வு தொடர்ந்து செழித்து, வரவிருக்கும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்று கூட்டாக அறிவிப்போம்" என்றார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!