Tamilnadu
“ஒன்றிய நிதியமைச்சரின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை..” - அமைச்சர் உதயநிதி பதிலடி !
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும், இது முடிந்த சில நாட்களிலேயே திருநெல்வேலி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் பெய்த கனமழையாலும் மக்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 100 ஆண்டுகள் இல்லாத வகையில் கனமழை பெய்ததால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.
இப்படி அடுத்தடுத்த இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்தது. உடனே மக்களை மீட்க அமைச்சர்கள் மற்றும் அரசு நிர்வாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கிடையில் மிக்ஜாம் புய கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு, 90% மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் நேற்று அறிவித்துள்ளார்.
மேலும் டிச.19ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2000 கோடியை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அடுத்தடுத்து 2 பேரிடர்களை சந்தித்த தமிழ்நாட்டிற்கு உடனே நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இதுகுறித்து நேற்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கும் முதலமைச்சர் விரிவான பதிலை அளித்தார். அதோடு வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கடும் பேரிடராக அறிவித்து ஒன்றிய அரசின் NDRFல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் ஒன்றிய பாஜக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.
இந்த சூழலில் இன்று செய்தியாளரை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதனை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறியதோடு, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தது குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார்.
நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் வலுக்கும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன பதிவு பின்வருமாறு :
“யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல, சிலரிடம் கலைஞரைப் போல, சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.
வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.
என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.
மீண்டும் சொல்கிறேன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!”
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!