Tamilnadu

“இது விற்பனைக்கு” : காணாமல் போன 116 ஆண்டுகள் பழமையான புத்தகம்.. ஒரே ஒரு போஸ்டால் சிக்கிய இளைஞர் !

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நூற்றாண்டு பழமையாக நூலகம் ஒன்று அமைந்துள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட இந்த நூலகத்தில் ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழி புத்தகங்கள் உள்ளன. தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நூலகத்தில் உலகம் முழுக்க இருந்து பலரும் வந்து பயன்பெறுவர். இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

குறிப்பாக இங்கு சில பழமை வாய்ந்த நூல்கள் உள்ளன. எனவே இதற்காக பலரும் இங்கு வருகை தருவர். இந்த சூழலில் இங்கு கடந்த அக்டோபர் மாதம் 6, 7 தேதிகளில் 'இலக்கிய திருவிழா' நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாசகர்கள், விருந்தினர்கள் என பலரும் பங்கேற்றனர். மேலும் இதற்காக புத்தக கண்காட்சியும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னரே, 'The Pirates of Malabar' என்ற புத்தகம் காணாமல் போனது தெரியவந்தது. John Biddulph என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் 1907-ம் ஆண்டு இது புத்தகத்தை எழுதினார். லண்டனில் அச்சிடப்பட்ட இந்த புத்தகமானது சுமார் 116 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு ரூ.10,000 ஆகும்.

பழமை வாய்ந்த புத்தகம் காணாமல் போனதால் அங்கிருந்த நிர்வாகிகள் அதிர்ச்சிக்குள்ளான நிலையில், இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கதில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 'The Pirates of Malabar' விற்பனைக்கு உள்ளது என்று குறிப்பிட்ட அவர், விவரங்களுக்கு தனது மொபைல் எண்ணையும் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் கவனத்திற்கு வந்தது. அப்போது அந்த புகைப்படத்தை பார்க்கும்போது, இந்த நூலகத்தின் முத்திரை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்தே இந்த புத்தகம், காணாமல் போன புத்தகம் என்று உறுதிப்படுத்திய போலீசார் விசாரணையை துரித படுத்தினர். அப்போது அந்த இளைஞரின் போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியோடு விசாரணை மேற்கொண்டதில், அவர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக பெங்களூரு விரைந்த போலீசார், கதித்ரா தேப்நாத் (34) என்ற அந்த இளைஞரை கைது செய்தனர்.

தற்போது அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞர் இதுபோன்ற பல்வேறு நூலகங்களில் இருந்து புத்தகங்களைத் திருடி விற்று வந்தது தெரிவந்தது. அதோடு அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்த புத்தகங்களில் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள நூலகங்களிலிருந்து திருடப்பட்ட புத்தகங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊட்டியில் 116 ஆண்டுகள் பழமையான புத்தகம் ஒன்று காணாமல் போன வழக்கில் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Also Read: 22 வயதில் சிறை சென்ற நபர், 71 வயதில் விடுதலை... செய்யாத தவறுக்கு தண்டனை... பின்னணி என்ன ?