Tamilnadu
வரலாறு காணாத மழை : களத்தில் 9 அமைச்சர்கள்.. 100% மின்சாரம் எப்போது வழங்கப்படும்? - தலைமை செயலாளர் பேட்டி!
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று அதீத கனமழை பெய்த நிலையில், மீட்பு பணிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "கடந்த இரு தினங்களாக வரலாறு காணாத மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடியில் வெள்ளம் ஏற்பட்டது. கடந்த 18 ஆம் தேதி காலை 8.30 மணியிலிருந்து 2.30-3மணி வரை தூத்துக்குடியில் 11 செ.மீ., மழையும், திருநெல்வேலி மாவட்டத்தில் 9 செ.மீ மழையும் சராசரியாக பதிவாகியுள்ளது. இதில் காயல்பட்டினத்தில் 36 மணி நேரத்தில் 116 செ.மீ மழையும், திருச்செந்தூரில் 92 செ.மீ அளவிற்கும் மழையும் பெய்துள்ளது.
இதன் காரணமாக கடலோர மற்றும் ஆற்றோர பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. சுமார் 1350 பேர் மீட்பு பணியில் உள்ளனர். அதில் தமிழ்நாடு பேரிடம் மீட்பு குழுவினர் 375 பேரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 250 பேரும், பேரிடர் பயிற்சி பெற்ற காவலர்கள் 550 பேரும், இராணுவம், கடலோர காவல்படை168 பேர் உள்ளிட்ட 1350 பேர் உள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 16,680 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு 160 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் முகாம்கள் தவிர கிராமங்கள் நகரங்களில் குறிப்பாக திருச்செந்தூர், காயல்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் 34,000 உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் படகில் செல்லமுடியவில்லை. எனவே 9 ஹலிக்காப்டர் மூலமாக 13,500 கிலோ உணவு பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 30,000 லிட்டர் பாலும், நெல்லை மாவட்டத்தில் 64,900 லிட்டர் பாலும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஒரிரு நாளில் பால் விநியோகம் சரியாகிவிடும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு பிற மாவட்டங்களில் இருந்து 46 லாரிகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. நெல்லையில் 88%-மும், தூத்துக்குடியில் 40%-மும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சில இடங்களில் தண்ணீர் வடிந்த பின் மின் விநியோகம் வழங்கப்படும். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரயிலில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வாகனம் மூலம் மணியாச்சிக்கு வந்து அங்கிருந்து திரும்புகின்றனர்.
மற்ற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 323 படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இப்போது செய்யவேண்டிய முக்கிய பணி, வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்க வேண்டும்; இயல்பு நிலைக்கு கொண்டுவரவேண்டும்.
சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்; ஒரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அதற்கு நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் 115 செ.மீ அளவிற்கு வரலாறு காணாத மழை பெய்யும் போது என்ன செய்ய இயலும். காயல்பட்டினத்தில் மட்டும் 2 நாளில் 115 செ.மீ. மழை பெய்துள்ளது.
9 அமைச்சர்கள், 18 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் களத்தில் உள்ளனர். மக்களோடு மக்களாக செய்து, பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலமும் ஹெலிக்காப்டர் மூலமும் மீட்டு வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகே 120 மீட்டர் அளவிற்கு சாலை முழுவதுமாக அடித்துச்செல்லப்பட்டுள்ளது.
இம்மாதிரியான மழை இருந்தால் உலகில் எந்த நகரமாக இருந்தாலும் சமாளிக்க இயலாது. தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி 24 மணி நேரமும் அதிகாரிகள் பணியில் உள்ளனர். இதுவரை திருநெல்வேலியில் 7, தூத்துக்குடியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் வெள்ளத்தால் 4 பேரும், வீடு இடிந்ததில் 3 பேரும், இடி மின்னலால் 2 பேரும், ஒருவர் இயற்கை மரணம் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்." என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!