Tamilnadu
கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : ரூ.133 கோடியில் உலகத் தரத்தில் உருவாகும் செம்மொழிப் பூங்கா !
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2010-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், கோயம்புத்தூரில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, 22.11.2021 அன்று கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை போன்ற அனைத்து வசதிகளும், கூட்ட அரங்கு, வெளி அரங்கு போன்ற கட்டமைப்புகளும் கொண்ட செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
கோயம்புத்தூர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை பறைசாற்றும் வகையில், தாவரவியல் தோட்டத்தை பின்புலமாக கொண்டு பொதுமக்கள் இயற்கையை அறிந்து கொள்ளவும், தாவர இனங்களை நிலைக்கத் தக்க வகையில் பயன்படுத்துதலை ஊக்கப்படுத்தவும், நீலகிரி உயிர்கோளப்படுகையில் உள்ள அரிய வகை தாவர இனங்களை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் ஆளுமையை நிறுவி மேம்படுத்தி மேலாண்மை செய்யும் நோக்கிலும், செம்மொழிப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
மேலும் உலகிலேயே இங்கிலாந்தில் உள்ள கியு பூங்கா மட்டுமே தாவர உயிரியல் வங்கியாகவும், அதன் தொடர்புடைய ஆராய்ச்சி மையமாகவும் உள்ளது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் அத்தகைய பூங்கா அமைக்கப்படாத காரணத்தால் சிறப்பு மிக்க தாவரங்களைக் கொண்ட செம்மொழிப் பூங்கா காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ளது.
இவற்றில் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பிலும், இரண்டாவது கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பிலும் பூங்கா அமைக்கப்படவுள்ளது. தற்போது முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் நோக்கத்துடன் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இயற்கையை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களுக்கு தாவரங்களை பற்றி அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும், சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்து அறிந்திடவும், பொதுமக்கள் குழந்தைகளுக்கு சிறந்த பொழுது போக்கிற்கு ஏற்ற வகையிலும் செம்மொழி பூங்கா 133.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகதரத்துடன் அமைக்கப்படவுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த இப்பூங்கா இந்தியாவிலேயே தனித்துவத்துடன் பல சிறப்புகளை உள்ளடக்கியிருக்கும். இப்பூங்காவில் செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம்தரும் வனம், நறுமண வனம் போன்ற பல வகையான தோட்டங்கள் அமைக்கப்படும். இதில் இயற்கை அருங்காட்சியகம், திறந்தவெளி அரங்கம், இயற்கை உணவகம், அனைத்து நவீன வசதிகளுடன் ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம் ஆகியவைகளும் அமைக்கப்படும்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!