Tamilnadu
”மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலை பாதிக்காது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான். இது நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது என தி இந்து ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இச்சூழலில் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்?
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான். இது நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது. பொதுவாகச் சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலப் பிரச்சினைகள்தான் தலைதூக்கிக் காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுக்குக் காரணம் ஆகும்.
இராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர்தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான் பா.ஜ.க அதிகம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பா.ஜ.க பெற்றுள்ளது.
பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பா.ஜ.க பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை. நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும். அதன் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம். மூன்று மாநிலத் தேர்தல் முடிவைப் படிப்பினையாகவே நாங்கள் பார்க்கிறோம்.
முதல்வராகிய நீங்களும் ஆளுநரும் கலந்து பேசி, நிர்வாகத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளைப் போக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆளுநர் உங்களை அழைத்திருக்கிறார். அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை இது களையும் என்று நம்புகிறீர்களா?
மாண்புமிகு ஆளுநர் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு பல முறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன். பேசி இருக்கிறேன். அரசு விழாக்களிலும் பல முறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார் – பேசினார். எனவே, நாங்கள் இருவரும் சந்திப்பது அல்ல பிரச்சினை. ஆளுநர் மனம் மாறித் தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டு மக்களுக்கும், சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!